? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119 :9-16

பாவத்துக்குத் தப்பும்படி

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119:11

ஆராதனை முடிந்து வெளியில் வந்தபோது, ஒரு வயோதிபத் தாயார் வேதவசனம் எழுதப்பட்டிருந்த ஒரு கடதாசியைத் தந்தார். அதை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் அகப்பட நேர்ந்தது. குழம்பிய உள்ளத்துடன் எதையோ எடுக்க சட்டைப்பைக்குள் கையை விட்ட எனக்கு அகப்பட்டது அத் தாயார் தந்த வேதவசனம்தான். அப்போதுதான் அதை ஆவலுடன் படித்தேன். நான் அகப்பட்டிருந்த சூழலில் அவ்வசனம் என்னைப் பெலப்படுத்தியது. தேவ வசனம் எத்தனையாய் வல்லமைமிக்கது! – என ஒருவர் சாட்சி கூறினார்.

இங்கே சங்கீதக்காரரும் அதைத்தான் வலியுறுத்துகிறார். ‘நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உம் வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்” என்கிறார். தேவனுடைய வார்த்தையால் எமது இருதயம் நிறைந்திருக்கும்போது, அங்கே பாவ சிந்தனைகளுக்கு இடமிருக்காது. பாவத்திலிருந்து எளிதாகத் தப்பிக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல ஒரு வாலிபன் தனது வழிகளை எப்படியாகச் சுத்திகரிப்பான் என்னும்போது, தேவனுடைய வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்வதினால்தானே என்றும் சங்கீதக்காரன் எழுதுகிறார். ஆகவே, எம்மைப் பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது தேவனுடைய வார்த்தைதான். அது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் உருவக் குத்துகிறதாயும் உள்ளது. பாவத்துக்குத் தப்பிக்கொள்ளும்படிக்கு எமக்கு உதவியாக இருப்பது தேவனுடைய வார்த்தைதான். நாம் எவ்வளவாய் அவற்றைத் தியானிக்கிறோமோ, எவ்வளவாய் அவற்றை மனனம் செய்து எமக்குள் தக்கவைக்கிறோமோ அவ்வளவுக்கு நாம் பாவத்துக்குத் தப்பி வாழுவதற்கு அது எமக்குஉறுதுணையாக இருக்கிறது.

இன்று பலர் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நமக்கு நேரமில்லாமற் போகிறது. யாராவது தியானித்து படித்து அதைச் சொல்லுவதைக் கேட்பதில் நாம் அதிக நேரத்தைச் செலவிட எத்தனிக்கிறோம். நாமாகப் படிப்பதற்குப் பின்னிற்கிறோம். ஆனால், தேவ வார்த்தையானது அதைத் தியானிக்கிற எவருக்கும் ஆசீர்வாதமாகவே அமையும். அதில் என்ன சந்தேகம்? நாமேதான் அதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளவேண்டும். தியானத்துக்கும் ஜெபத்துக்கும் அதிகளவு நேரம் ஒதுக்கிக்கொள்ள இக்காலத்திலாவது பழகிக்கொள்வோம். அது நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு அதிக பெலனாய் இருக்கும். ‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது.” சங்கீதம் 119:105

? இன்றைய சிந்தனைக்கு:  

தேவனுடைய வார்த்தைக்கு என் வாழ்வில் நான் என்ன முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin