? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 1:1-31

ஆதியிலே வார்த்தை

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

பாடசாலை நாட்களில், மஜிக் காட்சிகளை ரசிப்பதுண்டு. வித்தை காட்டுபவர் தமது கையிலிருந்த சிவப்புத் துணியிலிருந்து ஒரு வெள்ளை முயலை எடுப்பார். இது எப்படி? என யோசிப்பதற்குள் இன்னொரு வித்தை. இவை புரியாத புதிராகவே இருப்பதுண்டு. இந்த மாயாஜால வித்தைகள் பார்வையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நடத்தப்படும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் உலகம் அவ்வாறு படைக்கப்படவில்லை.

“வார்த்தை” இது சாதாரண விடயம் அல்ல. “சொல்”, “வாக்கு” என்றும் இதை வர்ணிக்கலாம். இந்த வார்த்தை எங்கிருந்து எப்போது வந்தது? இதன்  ரம்பம் என்ன? யோவான் தெளிவாக எழுதுகிறார்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” இந்த ஆதி என்பது எது? அது நமது கணக்கீடுகளுக்கும் நாட்காட்டிகளுக்கும் அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட வார்த்தை தேவனிடத்திலிருந்த ஒன்று, அதுவே தேவனாயிருந்தது. யோவான் அடுத்த வசனத்திலே, “அவர்” என்று தொடருகிறார். தேவனோடிருந்த வார்த்தையை, தேவனாயிருந்த வார்த்தையை யோவான் “அவர்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆதியாகமத்தில், வார்த்தையானது தேவனோடு இணைந்து, பரிசுத்தாவியானவரின் அசைவாடுதலோடு சிருஷ்டிப்பில் வெளிப்பட்டதைக் காண்கிறோம். “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின” (2பேதுரு 3:5) என்கிறார் பேதுரு. இது எப்படி? “இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்…”(ரோமர் 4:17) என்கிறார் பவுலடியார். சிருஷ்டிப்பின் தேவன், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார். உடனே வெளிச்சம் உண்டானது என்று பார்க்கிறோம். இது தேவனுடைய, தேவனோடிருந்த, தேவனாகிய வார்த்தை. ஆக, இந்தப் பிரபஞ்சத்தையே சிருஷ்டித்த தேவனே வார்த்தையாயிருந்து, முதன் முதலில் பேசினார். இந்தவார்த்தையே அன்று முதல் மனிதனுடனும், முற்பிதாக்களுடனும், சேயுடனும்,தேவதாசர்களுடனும் பேசியது. இன்று நம்முடன் பேசுவதும் இதே வார்த்தைதான்.இது மந்திர வார்த்தை அல்ல, ஜீவனுள்ள வார்த்தை, ஜீவன் தருகின்ற வார்த்தை.

தேவ வார்த்தைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? அதற்கு என்ன மதிப்பு கொடுக்கிறோம்? இந்த வார்த்தை மாத்திரம் இல்லாதிருந்தால், இன்று இப் பிரபஞ்சமும் இல்லை, நாங்களும் இல்லை. இந்த வார்த்தையே பூரணமானது, நித்தியமானது. அவர் நம்முடன் வாழுகின்றார். அவரே நமக்கு ஜீவனைத் தருகின்றார். கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. சங்கீதம் 33:6 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

? இன்றைய சிந்தனைக்கு:

இந்த மகத்துவமான வார்த்தையை நான் மந்திர வார்த்தையைப்போலப் பாவிக்கிறேனா? ஜீவன் தரும் வார்த்தையாக எனக்குள் உள்வாங்குகிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin