? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 33:26-29

நித்திய புயமே ஆதாரம்

கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே… உபாகமம் 33:29

பல இடர்களைத் தாண்டி ஒரு புதிய வருடத்துக்குள் ஜீவன் சுகம் பெலத்தோடு நம்மை நடத்திவந்தவர் கர்த்தர் ஒருவரே. அவரே தொடர்ந்தும் நடத்துவார். கடந்த வருடத்தில் முழு உலகமுமே பெரிய பயங்கரத்தைச் சந்தித்தது. எத்தனையோ பாதிப்புகள், பயங்கர நோய்த்தொற்றுகள், மரண ஓலங்கள், இழப்புகள், பெருக்கெடுத்த கண்ணீர்! பலரையும் இழந்த நிலை என நமது நம்பிக்கை தடுமாறினாலும், சூரியனோ, சந்திரனோ, நட்சத்திரமோ இன்னமும் மாறவில்லை. மனிதன் தான் வாழும் சூழலை மாசடையச் செய்தாலும், இன்னமும் சமுத்திர அலைகள் ஓயவில்லை; கடற்கரை மணலைத் தாண்டவில்லை. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன் பதறினாலும், சிருஷ்டி கர்த்தரோ மாறவேயில்லை. இனியும் அவரே நம்மை நிச்சயம் ஆதரிப்பார்.

கர்த்தருடைய கட்டளைப்படி இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு, கானானுக்கு நடத்தி வந்த மோசே, தனது முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தவராய், கடந்துவந்த பாதை களை இஸ்ரவேலுக்கு விபரித்து, தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்தார் (உபாகமம் 33:1). இந்த இடத்தில் ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது; அடுத்தது, ஆரம்பிக்கிறது. “கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?” மோசேயின் இவ்வார்த்தைகள் மீதி பயணத்திற்கான உற்சாகமளிக்கும் வார்த்தைகள்! சென்றடையவேண்டிய கானான் தேசத்தைக் குறித்த நிச்சயம்! நடந்தவற்றை மறந்து முன்னேறிச் செல்வதற்கான உந்துதல்! எகிப்திலிருந்து புறப்பட்டவர்களின் அடுத்த தலைமுறையினர் யோர்தானின் இக்கரையில் நிற்கையில், மோசே அவர்களை யோசுவாவிடம் கர்த்தருடைய கட்டளைப்படி கையளிக்கிறார். ஒரு புதிய சந்ததி; புதிய தலைமைத்துவம்; இதற்குமுன்னே நடக்காத ஒரு புதிய வழி; “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்கிறார் மோசே.

முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குப்படி, முரட்டாட்டம், கீழ்ப்படியாமையின் மத்தியிலும் இஸ்ரவேலரைக் கைவிடாது தேவன் நடத்தினார். இன்று தமது ஒரேபேறான குமாரனின் இரத்தத்தினால் கிருபையாக இரட்சிக்கப்பட்ட நம்மை, பரமகானானை நோக்கி நடத்துகிறார். அவர் கைவிடமாட்டார். கர்த்தருடைய புயங்கள் எப்போதும் நம்மை நோக்கி நீண்டிருக்கிறது. அதற்குள் அடைக்கலம் புகுபவர்களை அவர் நிச்சயம் ஆதரிப்பார். தேவனது வார்த்தைகளை இறுகப்பற்றியவர்களாகத் தேவனில் முழுமையான நம்பிக்கை வையுங்கள். தடுமாறும் வேளைகள் வந்தாலும் அதுவே கர்த்தரை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய நேரம். இந்தப் புதிய ஆண்டிலும் அநாதி தேவனுடைய புயங்கள் நம்மைத் தாங்கி நிற்கிறது என்ற நிச்சயத்துடன், நாம் முன்செல்வது மாத்திரமல்ல, அடுத்தவரையும் அந்தப் புயங்களின் பாதுகாப்புக்குள் வழிநடத்துவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

“எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்” இன்று இவ்வார்த்தை நம்முடன் பேசுவது என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin