? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 30:1-6

தனிமை வெறுமையா? இனிமையா?

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும். நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். சங்கீதம் 25:16

எமது மாதாந்த ஒன்றுகூடலுக்கு வரும் ஒருவர் கூறியது இது: “மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகள் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் இருந்தும் தனிமை என்னை வாட்டுகின்றது” என்றார் அவர். அப்போது நான், “இயேசுவுடன் வாழப் பழகுங்கள். அது உங்கள் தனிமையை இனிமையாக மாற்றும். தனிமையை இனிமையாக்குவதும் தனிமையை வெறுமையாய்ப் பார்ப்பதும் உங்கள் கரத்திலேதான் தங்கியுள்ளது” என்று ஆலோசனை கூறினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பலருடைய வாழ்வில் தவிர்க்கமுடியாத தனிமை ஒரு சவாலாக அமைந்துவிடுகின்றது. இந்தச் சவாலைச் சமாளித்து முறியடிக்க ஒரே உத்தமமான வழி, நமது ஆண்டவர் இயேசுவுடன் இணைந்துவிடுவதுதான்.

பெலிஸ்தரினால் திருப்பி அனுப்பப்பட்ட தாவீதும் அவன் மனுஷரும் சிக்லாகுக்கு வந்து சேர்ந்தபோது அங்கே பட்டணம் சுட்டெரிக்கப்பட்டுப் பெரிய வெறுமை காணப்பட்டது. அமலேக்கியர் வந்து சிக்லாகைச் சுட்டெரித்துக் கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள். இவர்களுடைய மனைவிகள் பிள்ளைகளையும் கொண்டுபோய்விட்டார்கள். அழுகிற தற்குக்கூட பெலனற்று நின்றனர் தாவீதும் அவன் மனுஷரும். போதாதற்குத் தாவீதுடன் இருந்தவர்களும் தங்கள் மனைவி பிள்ளைகளும் சிறைப்பிடிக்கப்பட்ட மனக்கிலேசத்தினால் தாவீதை கல்லெறியவேண்டும் என்றனர். தாவீது தனித்துவிடப்பட்டான். மனைவி, பிள்ளைகள், உறவுகள் அனைத்தையும் இழந்து தவித்த தாவீதை, கூடவே இருந்தவர் களும் தனிமைப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் தாவீதைக்குறித்து எழுதியிருப்பது என்ன? “தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். …தாவீது தன் தேவனாகிய கர்த்தருக் குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” என்பதே. இதன் பிரதிபலனைக்குறித்து இந்த 1சாமுவேல் 30வது அதிகாரத்தில் வாசிக்கலாம். கர்த்தருடைய பெலத்தால் அந்த தனித்த சூழ்நிலையையே முறியடித்தான் தாவீது.

வேதாகமத்திலே ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு என்று பலரது வாழ்விலே தனிமை அனுமதிக்கப்பட்டது. ஆனால் கர்த்தர் அத்தனைபேரையும் உயர்த்தினார். பத்மூ தீவில் யோவானைத் தனிமைப்படுத்தினார் கர்த்தர். அந்தத் தனிமையில்தான் இனிவரும் காரியங்களை யோவானுக்கு வெளிப்படுத்தினார். பல காரணங்களால் நாம் நம்மைத் தனிமைப்படுத்துவது வேறு. ஆனால் கர்த்தர் நமக்குத் தனிமையை அனுமதிப்பாரானால், நிச்சயம் கர்த்தருக்கு நம்மில் ஒரு நோக்கம் இருக்கும். ஆகவே, தனிமை நேரிடுமானால் தவித்துப்போகாமல், கர்த்தருடைய கரத்தில் நம்மைத் தருவோமாக. அவர் தனிமையை நமக்கு இனிமையாக மாற்றித்தருவார். “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்”(சங்.68:6).

? இன்றைய சிந்தனைக்கு:

தனிமை வேறு, தனிமையுணர்வு வேறு. இதைக்குறித்து என் சிந்தனை என்ன? என் வாழ்வில் தனிமை வருமானால் அதை எப்படி மாற்றி இனிமையாக்க முடியும்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin