? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 119:113- 120

கட்டுப்படுத்தவேண்டிய சிந்தனைகள்

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி. அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3

சிலநாட்களாக ஏதோவொன்று பூமொட்டைக் கடித்து அநியாயப்படுத்திக் கொண்டிருந் தது. அது எதுவாயினும் எனக்கு அது எதிரிதான். ஆகவே, அதைப் பிடிப்பதற்காக பொறிவைக்க நினைத்தேன். இதற்காகவும் ஒருவர் ஜெபிப்பாரா? ஆனால், நானோ, “ஆண்டவரே, இந்த எதிரியை அழிக்க வழிகாட்டும்” என்று ஜெபித்தேன். ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். எப்படியெனில், பொறிவைக்கும் எண்ணம் என்னைவிட்டுப் போய் விட்டது. ஒருநாள் சத்தம் கேட்டு, மெதுவாக ஓடிப்போய் பார்த்தால், ஒரு குஞ்சு அணில்! ஓக்கிட் பூ மர தண்டின் துனி வரைக்கும் ஏறி, பூமொட்டைக் கிட்டிவிட்டது. பெலத்த சத்தம் போட்டு மரத்தை ஆட்டிவிட்டேன். அது விழுந்தடித்து ஓடியது. அது ஓடிய வேகத்தைப் பார்த்து ரசித்தேன். அந்தளவுக்கு அழகாயிருந்தது. நல்லநேரம் நான் பொறிவைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். அதன் பின்னர் இன்றுவரைக்கும் அந்த அணில்குஞ்சு வரவேயில்லை.

 இதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருக்கும். ஆனால், சிறிதோ பெரிதோ எந்தக் காரியமானாலும் நாம் செய்ய நினைப்பதை, கீழ்ப்படிகின்ற மனதுடன் தேவகரத்தில் கொடுத்துப் பாருங்கள். நமது யோசனைகளை, சிந்தனைகளை தேவன் தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்து, தமது யோசனைப்படி அதனை நிச்சயமாகவே அழகாகச் செய்துமுடிக்க பெலன் தருவார். நாமோ, முதலில் சிந்தனையிலேயே பாவம்செய்து விடுவோம். நமது வீட்டிலே ஒரு பொருளோ, பணமோ தொலைந்துவிட்டால், முன்பின் யோசியாமல், யார் யாரையோ சந்தேகப்பட்டு, தவறாகக் கற்பனைபண்ணி, அவர்களைக் குற்றவாளிகளாக்கி விடுகிறோம். போதாததற்கு, அதனைப் பிறருக்கும் சொல்லி அடுத்தவனின் வாழ்வையே கெடுத்துப் போடுகிறோம்.

 நமது முதல் எதிரி, நமது சிந்தனைகளும் யோசனைகளும்தான். நமது சிந்தனை களை கட்டுப்படுத்தவில்லையானால், பலவேளைகளில் அதுவே நம்மை வெட்கப் படுத்திவிடும். எக்காரியத்தையும் செய்வதற்கு முன்பதாக, முதலில் நமது யோசனையை தேவகரத்தில் ஒப்புவிக்கப் பழகவேண்டும். தேவன் அவற்றை தம் ஆளுகைக்குள் கொண்டுவருவார். எதிலும் அவசரம் கூடாது. வீண்சிந்தனைகள் நம்மைத் தீமைக்கு நேராகவே நடத்தும். தனிமையாய் இருப்பதும், சிந்திப்பதும் தவறான சிந்தனைக ளுக்கு வழிவகுக்கும். கட்டுக்கடங்காத சிந்தனைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, கட்டுப்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் கைகளில் நமது மனதை நாம் அர்ப்பணித்து விடுவதே ஒரே சிறந்த வழி. எமது செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவிப்போம். அவர் மிகுதியைப் பார்த்துக்கொள்வார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

தேவனுடைய பிரியத்திற்கு என்னை வேறாக்கிவிடுகின்ற என் நினைவோட்டங்களை உண்மைத்துவமாய் கர்த்தரிடத்தில் ஒப்புவிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin