? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 4:1-11

ஆயத்தப்படுத்தல்

அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப் போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். மத்தேயு 4:11

காலமும் நேரமும் வேகமாக ஓடிக்கொண்டேபோகிறது. அதற்கு ஈடுகொடுத்து நாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம். காலையில் வீட்டைவிட்டு ஒவ்வொருவராகப் புறப்பட்டால், பின்னர் மாலை ஒவ்வொருவராக வீடு வந்தடைகிறோம். எங்கள் காரியங்களைக் கவனிக்கவோ, வாழ்க்கையை அமர்ந்திருந்து நிதானிக்கவோ, சோதித்தறியவோ நேரமில்லாமல் தவிக்கிறோம்; நேரத்தை ஒதுக்குவதற்கும் நாம் தயாரில்லை.

இங்கு இயேசு ஞானஸ்நானம் பெற்றதும் ஆவியானவரால் வனாந்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே அவர் நாற்பது நாட்கள் புசியாமலும், குடியாம லும் இருந்து தேவனோடு தனது உறவை வலுப்படுத்திக் கொண்டார். அவரது உபவாச நாட்கள் முடிந்தவுடன் பிசாசானவன் அவரைச் சோதிக்கும்படிக்கு வருகிறான். அவன் முன்வைத்த சகல சோதனைகளிலும் ஆண்டவர் தேவனின் வார்த்தையைக் கொண்டு ஜெயிக்கிறார். பின்னர் அவன் அவரைவிட்டுச் சிலகாலம் விலகிப்போனான். தேவதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். பிதாவின் சித்தத்தைச் செய்யும்படிக்கு வந்துதனது நோக்கத்தையும், ஊழியத்தையும், நிறைவேற்ற ஆரம்பித்த இயேசுவுக்கு, இந்த நாற்பது நாட்களும் ஒரு ஆயத்த நாட்களாய் அமைந்திருந்தது. ஆண்டவர் புசியாமலும்குடியாமலும் இருந்தபோது அங்கே அவரது மாம்சம் பெலவீனப்பட்டிருந்தது. ஆனாலும், பிசாசானவனை ஜெயிக்கும்படியாக அவரது ஆவி பெலனாய் உற்சாகமாய் இருந்தது. அவர் சத்துருவின் தந்திரங்களை ஜெயித்தவராக ஊழியத்தை ஆரம்பித்தார். இதைத்தான் பவுல் கலாத்தியருக்கு எழுதியபோது, ‘நீங்கள் ஆவிக்கேற்றபடி நடந்து கொண்டால் மாம்ச இச்சையை ஜெயிக்கலாம்” என்று எழுதுகிறார். நமது மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கிறது என்பது நாம் அறிந்ததே.

இன்று கர்த்தருடைய காரியமாக நாள்முழுவதையும் செலவிட நாம் ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, ஆயத்தப்பட ஒரு சில நிமிடங்கள்கூட செலவிட முடிகிறதில்லையே. அதற்கு நாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை? எமக்கு ஆயத்தகாலம், ஆயத்தநேரம் மிகவும் முக்கியமானது. இந்தக் கொரோனா வைரஸ் வந்து எமது நாளாந்த வேலைகளையெல்லாம் முடக்கிப் போட்டு எம்மை வீட்டுக்குள்ளேயே அடைத்துப்போடவில்லையா. அந்தநேரம் நாம் எல்லாவற்றையும் விட்டு ஓய்ந்துதானே இருந்தோம். அப்படியானால் இந்த நாற்பது நாட்கள் தபசுகாலங்களில் நாம் அதிக நேரத்தைக் கர்த்தருடைய பாதத்தில் செலவிட்டு அதை எமக்கு ஒரு ஆயத்தகாலமாய் ஏன் மாற்றக்கூடாது? சிந்திப்போம். ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” கலாத்தியர் 5:16

? இன்றைய சிந்தனைக்கு:

காலையில் எழுந்தவுடன் முதலாவது நாம் எதில்; அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin