­­ ? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 5:1-10

முழுமையான கீழ்ப்படிவு

அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு… எபிரெயர் 5:8

ஒரு காரியத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால், இன்னொன்றை இழந்துதான் ஆகவேண்டும். மாறாக, இலகுவாக நமது விருப்பங்கள் நிறைவேறுகிறது என்றால் அது எங்கிருந்து கிடைக்கிறது என்பதில் எச்சரிப்பு அவசியம். பாடுகளின்றி பரலோகம் இல்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்த நாம், அந்த மகிமையான உயிர்த்தெழுதலின் முன்னதாக நடந்த எவற்றையும் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்று மகா பிரதான ஆசாரியராக (எபி.4:14) நமக்காகப் பரிந்துபேசுகிறவராகப் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆனால், இந்த உன்னத நிலைக்காக அவர் தம்மை தாமே உயர்த்தவில்லை. பிதாவே அவரை உயர்த்தினார். இது நடந்தது எப்படி? இயேசு, மாம்சத்தில் இருந்த நாட்களில் மரண ஆக்கினையிலிருந்து தப்புவிக்க வல்லவரிடம் மகா சத்தமாய் கண்ணீரோடே விண்ணப் பம்பண்ணினார். அவர் தமது குமாரன் என்பதினால் பிதா தமது குமாரனை அந்த சிலுவை மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள விடவில்லை. இயேசுவின் மானிட வாழ்வு இலகுவானதல்ல. இயேசு தாமே பாடுகள் நிறைந்த இந்த வாழ்வைத் தெரிந்து கொண்டார் (யோவா.10:17,18). அதாவது தமது பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்து முடிப்பதற்காக இயேசு மேற்கொண்ட படிமுறைதான் இது.

பிதாவுக்குக் கீழ்ப்படிந்தால் வேதனை, பாடுகள், உலகத்தின் பாவத்தைச் சுமந்து பிதாவின் முகத்திலிருந்து மறைக்கப்படுதல், கொடூர மரணம் என்று யாவும் உண்டாயிருக்கும் என்று தெரிந்திருந்தும், பிதாவின் சித்தத்திற்குரிய பாதையை இயேசு மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டார். சகல பாடுகள் மத்தியிலும் இயேசு பரிபூரண மாகவே பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததாலேயே இன்று அந்த உன்னத ஸ்தானத்தில் ஜீவனுள்ளவராய் வீற்றிருக்கிறார். மாத்திரமல்ல, நமது வாழ்வில் என்ன பாடுகள் நேர்ந்தாலும் அவற்றின் மத்தியிலும் நாம் கீழ்ப்படிந்திருக்க நம்மை வழிநடத்தவும் அவராலே முடியும்.

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழுவது என்பது இந்த பொல்லாத உலகத்தில் கடினமே! ஆனால் கர்த்தருக்கு முழுமையாக கீழ்ப்படியாவிட்டால் அதன் பிரதிபலன் மிகவும் கொடுமையாக இருக்கும். உலகம் நாளை மாறிப்போகும். ஆனால் மாறாத கர்த்தரோடு நித்தியமாக வாழவேண்டுமானால் இந்த உலகம் கொண்டுவரும் பயமுறுத்தல்களுக்கு அஞ்சாமல், கர்த்தருக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்திருக்க ஆண்டவரைச் சார்ந்திருப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

உயிர்த்தெழுதலில் ஆண்டவரோடு இருக்கவேண்டுமானால் இன்று முழுமையான கீழ்ப்படிவு என் வாழ்வில் இருக்கவேண்டும். இதைக் குறித்து எனது மனஎண்ணம் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin