? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தீத்து 2:11-15

வந்தவர் வருகிறார்! 

எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்கதாக தேவ கிருபையானது பிரசன்னமாகி…  தீத்து 2:11

நாம் எதைப் பேசவேண்டும? எதைப் போதிக்கவேண்டும்? நமது உறவுகளோடு, நண்பர்களோடு, சபை மக்களோடு, மாத்திரமல்ல, கிறிஸ்துவை அறியாத மக்களோடு நாம் அன்றாடம் என்ன பேசுகிறோம்? நமது வாயிலிருந்து ஒரு நாளின் ஒரு மணிநேரத்தில் எத்தனை வார்த்தைகள் புறப்படுகின்றன? அவற்றில் முக்கிய இடம்பிடித்திருக்கிற பேச்சுக்கள் எவை? நாம் பிரயோகிக்கின்ற வார்த்தைகளில் எத்தனை தேவனை மகிமைப்படுத்துகிறது? எத்தனை மனிதரைப் பிரியப்படுத்துகிறது? எத்தனை பிறரைக் குற்றப்படுத்துகிறது? பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளைக் குறித்தும் நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் கணக்கொப்புவிக்க வேண்டும் (மத்.12:36).

‘இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள்” என்று பவுல் 15ம் வசனத்தில் ஆணித்தரமாக தீத்துவுக்கு எழுதுகிறார். இந்த ஆலோசனை தீத்துவுக்கு மாத்திரமா; இல்லை! இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு சீஷர் சீஷிகளுக்கும் எழுதப்பட்டது. இங்கே பவுல், தீத்துவுக்கு இரண்டு விடயங்களை வலியுறுத்துகிறார். ஒன்று, இவ்வுலகத்திலே ஜீவிப்பது@ மற்றது, இயேசுவின் மகிமையின் பிரசன்னமாகுதலுக்குக் காத்திருப்பது. இந்த இரண்டும் நமது கிறிஸ்தவ வாழ்வின் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. ஜீவிப்பது என்பது, எல்லா மனுஷருக்கும் பாவத்திலிருந்து இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபை நமக்கு இன்று அருளப்படும்பட்டிருப்பதால், அதற்கு சாட்சியாகவும், தேவனுடைய ராஜ்யத்தின் புத்திரராகவும் வாழுவதாகும். இதற்குத் தடையாயிருக்கிற உலக இச்சைகளிலிருந்து தப்ப அவரே பெலனும், சமாதானமும் தந்திருக்கிறார். இந்த சுத்திகரிப்புக்காக, இயேசு நமக்காகத் தம்மைத்தாமே கொடுத்தார். ஆகவே, துன்பத்திலும் துயரத்திலும் சோர்ந்துபோய், பாவத்தின் பிடியில் அகப்பட்டுத் தவித்து, வியாதியில் வேதனையுற்றிருக்கும் மக்களிடம் பேசவேண்டிய முதல் விடயம், ‘உங்களுக்கு ஒருவர் இருக்கிறார்” என்பதுதான். அடுத்தது, நாம் எதிர்பார்த்திருக்கும் நம்பிக்கை@ அது ஒரு ஆனந்த பாக்கியம். நம்மை மீட்பதற்காக வந்தவர், மீண்டும் வருவார். அன்று நாம் அவரை முகமுகமாய் காணுவோம். முழுப் பிரபஞ்சமும் அன்று மீட்கப்படும். நாம் இயேசுவோடு என்றும் வாழச் சென்றுவிடுவோம்.

வந்தவர் அருளிய மீட்பும், சமாதானமும் நமக்குள் இருக்கிறதா? கிறிஸ்துவைச் சந்திக்கத் தக்க நம்பிக்கை நமக்கு உண்டா? கிறிஸ்து பிறந்தார் என்ற உலகமே நம்பி கொண்டாடுகின்ற இந்த நாட்களிலே, நாம் எதைப் பேசவேண்டும்? பாடலோ, செய்தியோ, நாம் கிறிஸ்துவை போதிக்கவேண்டும். நம் வேதனையில் நம்மைத் தேற்றியவர், நம்மைப் பாவத்திலிருந்து மீட்டவர், மீண்டும் வந்து நம்மைச் சேர்த்துக்கொள்ளப் போகிறவர் என்ற நிச்சயத்தை பிறருக்குக் கொடுப்பதே மெய்யான கிறிஸ்மஸ். செய்வோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

என் பேச்சும் செயலும் என் வாழ்வில் யாருக்கு எதை வெளிப்படுத்துகிறது என்பதை உண்மை உள்ளத்துடன் ஆராய்ந்து பார்த்து, ஆண்டவரிடம் திரும்புவேனாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin