? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 9:9-21

பிறனுக்காகப் பாரப்படும் சிந்தை

…உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன். உபாகமம் 9:18

‘என் மகள் செய்த தவறுக்காக நான் உங்களிடத்திலே வந்துநிற்கிறேன். அவளுக்குத் தண்டனை கொடுத்து, தயவுபண்ணி அவளை மன்னித்துவிடுங்கள்” என்று எனது பாடசாலை நாட்களில் நான் செய்த ஒரு தவறுக்காக என் தகப்பனார், பாடசாலை அதிபரிடம் வந்து நின்றதை இப்போது நினைத்தாலும் எனக்கு மனவருத்தம்தான். இரவும் பகலுமாக நாற்பது நாட்கள் புசியாமல் குடியாமல் மலையில் தங்கி, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைப் பெற்றுக்கொண்ட மோசேயிடம், இஸ்ரவேலர் வழிவிலகிவிட்டதைக் கர்த்தர் தெரிவித்தார். கோபங்கொண்ட கர்த்தர், இஸ்ரவேலை அழித்து, மோசேயைப் பெரிய ஜாதியாக்குவதாகவும் கூறினார் (யாத்.32:7-16). ஆனால் மோசேயோ, கர்த்தரிடம் கெஞ்சிமன்றாடினார். எப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் தேவகோபத்துக்கு ஆளானார்களோ, அப்போதெல்லாம் மோசே கர்த்தரிடம் கெஞ்சுவார். கர்த்தரும் மனமிரங்குவார். மோசேயின் சந்ததிக்குத் தேவ ஆசீர்வாதம் கிடைக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தும், முற்பிதாக்களுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைக் களவாட மோசே துணியவில்லை. இந்த மோசேக்குக் கானான் பிரவேசம் மறுக்கப்பட்டதும் இதே மக்களாலேதான். ஆனாலும், மோசே, தேவனுடைய கட்டளையை மீறவுமில்லை; தனது மக்களை வெறுக்கவுமில்லை. மோசேயின் தலைமைத்துவம் ஒரு நல்ல முன்மாதிரி.

 மோசேயின் கைகளில் கர்த்தர் கொடுத்தது, தாமே செய்து, தமது விரலினாலே எழுதிய கற்பலகைகள். அது எவ்வளவு மகிமையானது. என்றாலும், மக்கள் தேவனை வேதனை படுத்தியதால் கோபங்கொண்ட மோசே அதை உடைத்துப்போட்டார். அதற்காகக் கர்த்தர் மோசேமீது கோபம்கொள்ளவில்லை. அவற்றுக்கு ஒப்பான இரண்டு கற்பலகைகளைச் செய்துகொண்டு அதிகாலையில் மலைக்கு வரும்படி அழைத்து, திரும்பவும் எழுதுவித்தார். மோசேயின் மனதைக் கர்த்தர் அறிந்திருந்தார். ஒரு எச்சரிக்கையாக மோசேக்குக் கானான் பிரவேசம் மறுக்கப்பட்டாலும், மோசேயின் மரணத்தில் கர்த்தர் தாம் மாத்திரமே கூடவே இருந்து, அவரை அடக்கம்பண்ணி, இன்றுவரை யாரும் அதை அறியாதபடியும் செய்து, மோசேயைக் கனப்படுத்திவிட்டார்.

பிறருக்காக, அவர்களின் இரட்சிப்புக்காக மன்றாடுவதென்பது ஒரு அற்புதமான பண்பு. இதனைப் பவுலும் செய்தார். “மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:3) என்கிறார். கிறிஸ்துவும், நமக்காக, நமது பாவங்களுக்காகச் சிலுவையில் தொங்கியபடி மன்றாடினாரே! இந்த சிந்தை நம்மிடம் உண்டா? பிறருக்காக, பிறரின் தவறுகளுக்காக நாம் எவ்வளவுதூரம் பாரப்பட்டுத் தேவனிடம் மன்றாடுகிறோம்?

? இன்றைய சிந்தனைக்கு:

இந்த ஆண்டிலே, ஒரு சிலரின் பெயர்களை எழுதிவைத்தாவது, அவர்களுக்காக ஜெபிப்போம். நிச்சயம் கர்த்தர் அந்த ஜெபங்களில் மகிழ்ந்திருப்பார்; பதிலளிப்பார்

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin