? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51:10-12

மேன்மையை உணரும்போது

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்,நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10

மனித வாழ்வில் சகலமும் நேர்த்தியாக இருக்கும்போது, எல்லாவற்றிலும் சந்தோஷமாய் இருக்கவும் முடியும். தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அந்த ஆசீர்வாதங்களையே இழக்கவேண்டியும் நேரிடும், மனமகிழ்ச்சியும் மறக்கப்பட்டுபோகும். அப்போதுதான் முன்னர் இருந்த நிலைமையின் அருமையை நம்மால் உணர முடிகிறது. அதினிமித்தம் இழந்தவற்றை மீண்டும் பெற பல பிரயத்தனங்கள் எடுக்க வேண்டிவரலாம். ஆனாலும் அவை உடனே கிடைக்காது. கையில் கிடைத்தவற்றைக் கைநழுவ விட்டுவிட்டுக் கலங்கிநிற்கும் நிலைதான் அது. கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமான பரிசுத்த வாழ்வை தேவபயத்துடனும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுடனும் காத்துக் கொள்வது அவசியம்.

கர்த்தர் கொடுத்த கனிவான ஆசீர்வாதமான தேவ பிரசன்னத்தை இழந்து தவிர்த்து அங்கலாய்த்த ஒரு மனிதனின் கதறுதலே 51ம் சங்கீதம். தாவீது பத்சேபாளில் மையல் கொண்டு, பாவத்தில் வீழ்ந்து, அவளுடைய கணவன் உரியாவையும் கொலைசெய்ததுமல்லாமல், ஒரு விதவைக்கு வாழ்வளிக்கும் உத்தம ராஜாபோல வேடம்போட்டு தான் இச்சித்த பெண்ணைத் தனதாக்கியும்கொண்டான். அப்போது நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் வந்தார். அவர், தாவீதின் பாவத்தை ஒரு உவமைமூலமாக வெளிப்படுத்தி உணர்த்தியபோது, தாவீது தன்னிலைமையை உணர்ந்தான், தான் எதையெல்லாம் இழந்துவிட்டான் என்பதையும் உணர்ந்தான், இழந்துபோன ஆசீர்வாதங்களை மீண்டும் தரும்படி தேவனிடம் கெஞ்சிநின்றான். சுத்த இருதயத்தையும், நிலைவரமான ஆவியை யும் புதுப்பித்துத் தரும்படி கெஞ்சுகிறான். தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்ட சுத்த இருதயத்துடன் நிலைவரமான உறுதியான வாழ்க்கை வாழமுடியும் என்பதை தனது கடந்தகால அனுபவங்கள்மூலமாக நன்கு அனுபவித்தவன்தான் தாவீது. மட்டுமன்றி, இவைகள் இருக்கும்போதே தேவனுடைய சமூகத்திலிருந்து கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கமுடியும், பரிசுத்த ஆவியின் நடத்துதலும் கிடைக்கும். இதையெல்லாம் அனுபவித்தவன் தாவீது. அதனால்தான் இவை யாவையும் இழந்துபோனதை அவனால் உணரமுடிந்தது. இன்று அத்தனையையும் இழந்து வெறுமைக்குள் தள்ளப் பட்டுப்போனதை உணர்ந்து கதறுகிறான் தாவீது.

தாவீதைப்போல இன்று நாமும் நமக்கிருந்த சுத்த இருதயம், நிலைவரமான ஆவி, தேவனுடைய சமுகம், பரிசுத்த ஆவி, இரட்சண்யத்தின சந்தோஷம், உற்சாகமான ஆவி இவைகளை இழந்து நிற்கின்றோமா? ஏன்? நம்மை ஆராய்ந்துபார்த்து, மெய் மனஸ்தாபத்துடன் மனந்திரும்புவோம். என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும் (சங்.39:8).

? இன்றைய சிந்தனைக்கு:

பாவம் நிறைந்த இவ்வுலகில், சுத்த மனது, திறந்த மனம் அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறேனா? தேவனிடம் திரும்புவோமா.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin