📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 17:48-54

முற்றாய் அழித்துப்போடு!

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். ..நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 1கொரி.9:25

கடுமையான முயற்சி செய்து பெற்றுக்கொள்ளும் பலரது வெற்றிகள் விரைவிலேயே மங்கிப்போவதைக் கண்டிருக்கிறோம். அதற்குப் பெருமையும், மேட்டிமையும் மறைவான காரணங்களாக இருக்கலாம். இவையும் ஒருவிதத்தில் நமக்குள் எழுகின்றதும் நம்மைத் தோற்கடிக்கின்றதுமான இச்சையுள்ள எண்ணங்கள் அல்லவா!

தாவீது – கோலியாத் சம்பவத்தில், என்னை மிகவும் கவர்ந்த பகுதி இதுதான்: “தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. ஆகையால், தாவீது பெலிஸ்தன் அண்டை ஓடி, அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்.” நெற்றிப் பொட்டில் கல்லடிபட்டு விழுந்தவன், எழுந்திருந்தால்… என்று ஒரு கணம் சிந்தித்து தாவீது தயங்கியிருந்தால் என்னவாகியிருக்குமோ! அடுத்தது, விழுத்திவிட்டதுடன் தன் வேலை முடிந்தது என்று தாவீது பெருமிதத்துடன் திரும்பியிருந்தால்…! மேலும், பயந்து நடுங்கிய சவுலைக் கேலிபண்ணி, பெலிஸ்தனை வென்ற பெருமையைத் தனதாக்கி கொண்டாடியிருந்தால்…! ஆனால், தாவீதோ இஸ்ரவேலின் தேவனுக்காகத் தான் செய்ய வேண்டியது இன்னமும் முடியவில்லை என்பதை உணர்ந்தவனைப்போல முன்னோக்கி ஓடினான். கோலியாத்தின் மேலே ஏறி நின்றான். என்ன கெம்பீரம்!

கோலியாத்தின் பட்டயத்தையே உருவி, அவனுடைய அந்தக் கனதியான பட்டயத்தாலேயே அவனைக் கொன்றுபோட்டான் தாவீது. இங்கேதான் இஸ்ரவேலுக்காகத் தாவீது பெற்றுக்கொண்ட வெற்றி உறுதியானது. கோலியாத்தின் கொடூரத்தைப் பார்க்கிலும் கொடிய பாவத்திற்கு எதிரான நமது போராட்டத்திற்கான அருமையானதொரு பாடத்தைத் தாவீது கற்றுத் தந்திருக்கிறார். சகேயுவும் அதைத்தான் செய்தான். எந்தப் பணம் அவனுக்குள் ஆசை இச்சையைத் தூண்டி, தேவனுக்கும் மனுஷருக்கும் அவனை தூரமாக்கியதோ, மனந்திரும்பியவுடன், அதே பணத்தாலேயே தன் பணஆசையை வேரோடு சாய்த்தான் சகேயு. அநியாயமாய் எடுத்த பணத்திற்குப் பதிலாக நான்குமடங்காய் திரும்பக் கொடுக்கும் மனது நமக்கு வருமா? தேவனையும் நம்மையும் பிரித்துப்போடும் எதுவானாலும் அது நமக்கு எதிரிதான். அதனை எதிர்கொண்டு விழுத்தினால் போதாது. முன் ஓடி அதையே கையிலெடுத்து சத்துருவை முற்றாய் அழித்துப்போடவேண்டும். சிலசமயங்களில், இது இருக்கட்டும், நான் தொடமாட்டேன் என்று சில காரியங்களை நாம் பின்வைப் போம். ஆனால், அதுவே மீள உயிர்பெற்று நம்மை அழித்துப்போடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பிதாவையும் என்னையும் பிரித்துப்போடுகின்ற ஏதாவது என்னுள்ளே இருக்கிறதா என்பதை ஆராய ;ந்து, அதை அழித்துப்போட என்னை ஆவியானவர் கைகளில் ஒப்புவிப்பேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin