? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 28:1-14 எபே 2:1-7

ஜெயம் தரும் தேவன்!

கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்.. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார். நீ கீழாகாமல் மேலாவாய். உபாகமம் 28:14

சக்கர நாற்காலியில் பெருமூச்சுடன் வானத்தை அண்ணாந்து பார்த்திருந்த கமலாவின் கைகள், மரப்பொம்மை ஒன்றை தடவிக்கொண்டிருந்தது. அந்தக் குரங்கு பொம்மையின் தலையும் ஒடிந்து வாலும் பாதியளவு முறிந்துவிட்டிருந்தது. “இந்தக் குரங்கு பொம்மைக்கும் எனக்கும் என்ன வித்தியாசம். நான் யாருக்கும் பிரயோஜனமற்றவள். இந்நிலையில் கடவுள் என்னை தலையாக்காவிட்டாலும் வாலாகத்தன்னும் ஆக்கிவிட வாய்ப்பு உண்டா?” அவளது கண்ணீர் பொம்மையை நனைத்தது. கண்ணீர்பட்ட இடத்தை பார்த்தாள். கழுவப்பட்டது போன்று அவ்விடம் மிளிர்ந்தது. அதைக் கண்டதும் தண்ணீர் கொண்டு அப்பொம்மையின் அழுக்கைப் போக்கினாள். முறிந்த தலையை சரிப்படுத்தி, கழுத்திலே ஒரு அழகான பட்டியைக் கட்டினாள். ஒடிந்த வாலைச் சரிப்படுத்தினாள். அழகிய வர்ணம் பூசினாள். ஓ! என்ன அழகான பொம்மை. “நீ தலையாகிவிட்டாய்” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள். பல வருடங்களின் பின்னர் இதே கமலா நாற்காலியில் இருந்தவாறே செய்த சிறுசிறு கைப்பணிகளினால் சேகரித்த பணத்தைக் கொண்டு பெரிய காரியங்கள் செய்தாள். “அக்கிரமங்களிலே மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் என்ற பவுலின் வார்த்தையை புது வடிவம் பெற்ற இப்பொம்மை நினைவுபடுத்தி என்னை உயிர்பித்தது. இந்த ஒடிந்துபோன பொம்மையே புதிய தோற்றத்தைப் பெறுமானால், நான் கர்த்தருக்கு அதிக பெறுமதியுள்ளவள் அல்லவா” என்றாள் அவள்.

தம்முடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கைக்கொண்டு, அதன்படி நடந்தால் ஆசீர்வாதம் என்று மோசேமூலம் இஸ்ரவேலுக்குக் கூறப்பட்டது. ஆனால், நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற இஸ்ரவேலினால் முடியவில்லை. ஆனால், அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்துப்போயிருந்த நம்மை இன்று இயேசுவின் மரணம் உயிர்ப்பித்திருக்கிறது. அதை உணருகின்ற எவனாலும் அவருடைய வார்த்தையை அலட்சியம் செய்யமுடியாது, ஏனெனில் வார்த்தைக்குக் கீழ்ப்படிகின்ற கிருபையையும் கர்த்தர் தந்திருக்கிறார். அந்தக் கிருபையே கமலாவையும் உயர்த்தியது.

எல்லா மனச்சோர்வுகளையும் விட்டுத்தள்ளுவோம். மரணத்தையே ஜெயித்த ஆண்டவர் நமக்கிருக்க நாம் ஏன் வாலாக இருந்தால் போதும் என்று நினைக்கவேண்டும்? அவரது கைகளுக்குள் அடங்கி இருப்போமானால் அவர் நம் தலைகளையே உயர்த்துவார். தாழ்வு மனப்பான்மையை உதறிவிட்டு எழுந்திருப்போம். பாவத்திலிருந்த நம்மை இரட்சித்தவர்தாமே கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களில் நம்மை உட்கார வைக்கவும் வல்லவராக இருக்கிறார். நாம் என்றும் கீழானவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் பதிப்போம். நாம் இருக்குமிடம் சக்கரநாற்காலி போன்றதானாலும், அதனையும் வெற்றி பாதையாக மாற்றிவிட நமக்குள் வாசம்பண்ணும் கர்த்தரால் முடியும்.

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே எனக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று என்னால் சொல்லக்கூடுமா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin