? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாக்கோபு 1:13-20

உன்னை நீயே ஆராய்ந்து பார்!

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக… யாக்கோபு 1:13

நாம் நினைக்கின்ற, செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் பிறரைக் குற்றப்படுத்தித் தப்பிக்கொள்வது இலகுவான விடயம். அன்று ஏவாளும் ஆதாமும் செய்ததையே இன்று நாமும் செய்கிறோம். எந்தவொரு விடயத்திலும் முன்பின் யோசியாது, நம்மைப் பாதுகாப்பதற்காகச் சொல்லும் சாட்டுகளாவன: இது அவருடைய தவறு, ஒன்றும் செய்யஇயலாது, எல்லாரும்தான் செய்கிறார்கள், ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது, யார்தான் சுத்தம், நான் மனுஷன்தானே, இந்த ஒருமுறைதானே, சாத்தான்தான் தூண்டிவிட்டான், நான் கட்டாயப்படுத்தப்பட்டேன், தவறு என்று நான் நினைக்கவில்லை, கடவுள் என்னைச் சோதித்துவிட்டார், நான் நம்பின கடவுள் தடுத்திருக்கலாமே! இவற்றில் ஒரு நினைவாவது நமக்குள் ஒருநாளும் எழவில்லை என்று நம்மால் சொல்லமுடியுமா? முடியாது.

ஒரு விடயத்தை நினைவில் வைப்பது நல்லது. எப்போது நமது தவறுகளுக்கும் பாவங்களுக்கும் சாட்டுப்போக்குச் சொல்லுகிறோமோ, அப்போதே நமது குற்றங்களைப் பிறர் மீதோ, சூழ்நிலைகளிலேயோ நகர்த்திவிட்டு, நம்மை நல்லவர்களாகக் காட்டி, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம் என்பதுதான் உண்மை. இது ஓரு கிறிஸ்தவனுக்கு நல்லதல்ல. இது நமக்குத் தெரியாததுமல்ல. ஒருவிசை அமர்ந்திருந்து சிந்தித்தால், நடந்த தவறில் நமது பங்கு என்னவென்பது நமக்கு விளங்கும். நமது பொறுப்பை நாம் உணர்ந்து, அறிக்கையிட்டு, தேவமன்னிப்பைப் பெற்று அதைச் சரிப்படுத்தினால், மற்ற எல்லாமே சரிப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் தேவன் நமக்குச் சுயாதீனம் தந்துள்ளார். அந்தச் சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், நேர்வழியில் சிந்தித்து, கட்டுப்பாட்டுடன் வாழுவதற்கு நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவரையும் தேவன் தந்தருளியிருக்கிறார். ஒரு உயரமான பனிமலையின் உச்சியிலிருந்து உருள ஆரம்பிக்கும் பனிக்கட்டி, கீழே வந்து விழும்போது அழிவையே ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பெரிதாகியிருக்கும். நமது தவறுகளைச் சிந்தனையிலேயே சரிப்படுத்தாவிட்டால், அது பெரிய சிதைவுகளை ஏற்படுத்திவிடுகிற அளவுக்குப் பெருத்துவிடும். தேவன் நம்மைப் பொல்லாப்பினால் சோதிப்பவர் அல்ல. நாம் உறுதிப்படவும், தம்மை நெருங்கிச் சேரவும் பிசாசின் சோதனை களுக்குச் சிலசமயம் இடமளிக்கக்கூடும். அந்தவேளையிலும், அவரை அண்டிநிற்கும் எந்தவொரு பிள்ளையையும் அவர் விட்டுவிலகுகிறவரும் அல்ல. எனவே, ஒவ்வொரு விநாடியும் நமது மனதில் தோன்றும் எண்ண அலைகளைக்குறித்து உணர்வுடன் வாழக் கற்றுக்கொள்வோமாக. நாம் தேவனுக்குள் நிலைகொண்டிருந்தால், பிசாசு கொண்டு வரும் எந்த ஒரு சோதனையிலும் நாம் தடுமாறவே மாட்டோம்.

? இன்றைய சிந்தனைக்கு:

‘பிதாவே, என்னைச் சோதித்தறிந்துகொள்ளும்’ என்று ஒப்புக் கொடுத்துவிட்டால், பிறரைக் குற்றப்படுத்தாமல், என் தவறுகளை நானே உணரமுடியும். சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin