? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமுவேல் 17:38-47

வெற்றிக்கு வழி

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. 2கொரிந்தியர் 10:4

ஏறத்தாள 9 அடி உயரமுள்ள கோலியாத்துக்கு முன்பாக நின்ற தாவீது, ஒரு கோழிக் குஞ்சு மாதிரித்தான் தெரிந்திருப்பான். அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து, “நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா” என்று கிண்டல்பண்ணினான். அவன் தனது உருவத்தில், பலத்தில், வீரத்தில் நம்பிக்கை வைத்திருந்தான். தன்னை எதிர்க்க வந்திருப்பவனைக் கண்டபோது, தன்னுடைய 5000 சேக்கல் வெண்கலத்தைக்கொண்ட தலைச்சீராவை தூர எறிந்திருக்கலாம்; அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், அவனது போராயுதங்களில் அவனுக்கு அத்தனை நம்பிக்கை. தாவீது உருவத்திலும் சிறியவன்; போர் அனுபவத்தில் பூஜ்ஜியம்; சவுல் கொடுத்த அணிகலங்களையும் தள்ளி விட்டான். அவனது கைகளில் இருந்தது கவணும் கூழாங்கல்லும்தான். தாவீது தன் கவணில் நம்பிக்கையும், கிடைக்கக்கூடிய பரிசில் கவனமும் வைத்திருந்திருந்தால், அவனது சரித்திரம் வேறுவிதமாக மாறியிருக்கும். ஆனால், தாவீதோ, “இஸ்ரவேலு டைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமம்” என்ற நம்பிக்கை ஒன்றையே போராயுதமாகக் கொண்டிருந்தான்.

பெலிஸ்தனைக் கண்டதும் தாவீதின் சிந்தனை குழம்பியிருக்கவேண்டும்; பின்வாங்கி ஓடியிருக்கவேண்டும். ஆனால், தாவீது தன் மனதைத் தோற்கடிக்கக்கூடிய அரண்களாகிய சிந்தனைகளைச் சிறைப்பிடித்து நிர்மூலமாக்கிவிட்டான். இஸ்ரவேலின் கர்த்தருடைய நாமத்தை அந்த இடத்திலே நிறுத்தினான். கலங்கவேண்டிய மனதும், அதில் தோன்றக்கூடிய தோல்விக்குரிய எண்ணங்களும் கட்டுக்குள் வந்தன. அவனது மனக் கண்களில் சேனைகளுடைய தேவன் மாத்திரமே நின்றிருந்தார். இல்லாதிருந்தால், ‘கர்த்தர் பட்டயத்தாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டம் அறிந்துகொள்ளும். யுத்தம் கர்த்தருடையது’ என்று தாவீதால் முழங்கியிருக்க முடியாது. இறுதியில் பெலிஸ்தன் சரிந்தன்.

நாம் பலவீனர்தான். என்றாலும், நமக்குள் இருப்பவர் பெரியவர். அதனை வாய்ப் பேச்சுக்குச் சொல்லிவிட்டு, பாவத்திற்கு எதிரான போரில் நாம் தோற்றுப்போகலாமா? நமக்குள் எழுகின்ற அரண்கள் நம்மைச் சோர்வுறச்செய்யும் சிந்தனைகள்தான். குறை சொல்லுதல், குற்றம்பிடித்தல், தவறை மறைத்தல், புறங்கூறுதல் போன்ற உலகத்தின் போராயுதங்களைத்தான் இன்று நாம் நம்பியிருக்கிறோம். நமக்குள் எழுகின்ற பாதகமான சிந்தனையின் அரண்களை அவை நிர்மூலமாக்குமா? இன்னும் பலப்படுத்தும். மாம்சத்துக்கேற்ற நினைவுகளை நிர்மூலமாக்கத்தக்க போராயுதங்களையே தேவன் நமது கைகளில் தந்திருக்கிறார். ஆகவே, முழு நிச்சயத்தோடு பாவத்திற்கு எதிராக நாம் போராடலாமே

? இன்றைய சிந்தனைக்கு:  

எனக்குள் நான் கொண்டிருக்கும் பெலன் எத்தகையது? இந்த உலகமும் என் சுயமுமா? என்னைப் பாவத்திலிருந்து பிடுங்கியெடுத்த இயேசுவின் பலமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin