? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரிந்தியர்  4:8-18

உள்ளான மனுஷன்

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. 2கொரிந்தியர் 4:16

கொரோனா தொற்றினால் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த காலங்களில், வலையமைப்பில் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட பகிடி என்னவென்றால், வீட்டைவிட்டு வெளியே போகமுடியாததால் பெண்கள் அழகுக்கலை நிலையத்துக்கும், ஆண்கள் உடற்பயிற்சி நிலையங்களுக்கும் செல்லமுடியாமல் அவர்களது முகம், உடல் என்பன அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு மோசமாகக் காட்சியளித்ததுதான். இந்த வெளியான மனுஷனை அழகுபடுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாம் எத்தனை பாடுபடுகிறோம்! இதற்காக எவ்வளவோ பணத்தை விரயம் செய்கிறோம். அவைகள் வீணென்று நாம் உணருவதேயில்லை.

எங்கள் புறம்பான மனுஷன் ஒருநாள் மண்ணோடு மண்ணாக அழிந்துபோவான். அவனை நாம் எவ்வளவு புஷ்டியாகவும் அழகாகவும் வைத்திருந்தாலும், தேவன் நியமித்த நாளில் அவன் மரித்து மண்ணில் அழிந்துபோவான். ஆனால் உள்ளான மனுஷனோ நித்திய நித்தியமாய் தேவனோடு வாழுவான். அவனுக்கு அழிவென்பதே இல்லை. ஆனால், நாம் இந்தப் புறம்பான மனுஷனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலே அரைவாசி கூட இந்த உள்ளான மனுஷனுக்குக் கொடுப்பதில்லை.

‘எங்கள் புறம்பான மனுஷன் அழிந்தும் எமது உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” என்கிறார் பவுல். நெருக்கங்களால், பாடுகளால், புறம்பான மனுஷன் பாதிக்கப்படலாம்; ஆனாலும், நெருக்கங்களில் நாம் ஒடுங்கிப்போவதில்லை. சோதனைகளில் சோர்ந்துபோவதில்லை. காரணம் எமது உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதேயாகும். மேலும், கிறிஸ்துவின் ஜீவன் எம் சரீரத்தில் விளங்கும் படிக்கு அவரது மரணத்தை எமது சரீரங்களில் சுமந்து திரிகிறோம் என்பதையும் சிந்திப்போம். அதாவது, கிறிஸ்துவுக்காக மரணத்தையும் ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாய் இருப்பதாகவே பவுல் குறிப்பிடுகிறார். இந்தத் தைரியம், உள்ளான மனுஷனில் உள்ள தைரியமேயாகும். ஆனால் நாமோ இந்த உள்ளான மனுஷனைச் சாகடித்துவிட்டு, எமது புறம்பான மனுஷனை ஜோடித்து மகிழுகிறோம். இன்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். உள்ளான மனுஷனில் பெலன் கொள்வோம்.

இந்தத் தபசுகாலங்களில் சிலர் உபவாசம் இருந்து தங்கள் மாம்சத்தை ஒடுக்குவது உண்டு. அவ்வண்ணமாய் மாமிசம் ஒடுங்கும்போது, உள்ளான மனுஷனும் பெலன் அடைய வாய்ப்புண்டு. ‘நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பெலப்படவும்…” வேண்டும். எபேசியர் 3:16

? இன்றைய சிந்தனைக்கு:

எத்தனை மணிநேரம் கண்ணாடி முன்னும், எத்தனை மணி நேரம் முழங்காலிலும் நிற்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Comments (82)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *