? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரிந்தியர் 10:1-7

சிறைப்படுத்தவேண்டிய சிந்தனை

…எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2கொரிந்தியர் 10:5

நான் வாசித்ததும், என்னைச் சிந்திக்கத் தூண்டினதுமான ஒரு பகுதியை உங்கள் சிந்தனைக்காக உங்கள் முன்வைக்கிறேன். “நமது உள்ளம் எல்லாவித சிந்தனைகளுக் குள்ளும், பிறரைப்பற்றிய வீணான கற்பனைகளுக்குள்ளும், சிற்றின்பங்களுக்குள்ளும், தகாத உறவுகளுக்குள்ளும் பங்குபெறும்படி நம்மை இழுத்துச்செல்ல ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. அவற்றில் ஏதாவது ஒன்றை அடுத்தவன் செய்யக்கண்டால், நீதியின் பொருட்டு எழுகின்ற கடுங்கோபம் அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கும். ஆனால், நாம் தனித்திருக்கும் நேரங்களில், இருட்டறைகளில் நமது மனதில் அதே தீதான நடத்தையை நாமே செய்கிறவராக இருப்போம். எனினும், நாம் குற்றஉணர்வு கொள்வதுமில்லை, நம்மில் நாம் கோபம் கொள்வதுமில்லை. காலம் இடம் என்று இயற்கையின் தடைகளைத் தாண்டி நமது உள்ளம் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோகும். நமக்குப் பிடித்த நபரோடு நாம் விரும்பியதைப் பேசவும் செய்யவும் ஏவிவிடும். ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலே இப்படிப்பட்ட சிந்தனைகள் எழ வாய்ப்பு உண்டு என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அதிக பயம் உண்டாகிறது. இந்த வாய்ப்பு களையெல்லாம் ஒருவர் தனது சிந்தனையில் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொள்வாரானால், அதன் விளைவு பேரழிவாக அமையும்.

” சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு கற்கும் மாணவன் ஒருவன் தன் ஆசிரியையைக் கொலைசெய்ததை பத்திரிகையில் படித்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அவனை விசாரித்தபோது, ஒரு குறிப்பிட்ட சினிமாப் படத்தை முப்பது தடவை தான் பார்த்ததாகவும், அதன் விளைவாகவே இக் கொலையைச் செய்வதற்குத் தான் உந்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறான். இன்று இதிலும் பயங்கரமான விடயங்களைக் கேள்விப்படுகிறோம். ஒரு மனிதனுடைய மனம், சிந்தனை, அச் சிந்தனையை அசை போடுதல் என்பதெல்லாம், மனிதனுடைய வாழ்வைச் சீரழித்துவிடுமளவுக்கு விளைவு களை ஏற்படுத்தும். கட்டுப்பாடற்ற சிந்தனையே நமக்கு முதல் எதிரி என்பதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியுமா?

 பவுலடியார் தமது எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்தித் தான் வாழ்வில் வெற்றி பெற்றார். சிறைப்படுத்துதல் என்பது, ஒரு போரிலே எதிரியை சிறைப்பிடிப்பதற்குச் சமம். எவ்வித இரக்கமுமின்றி எதிரியைச் சிறைப்படுத்தினால்தான் நமது வெற்றி நிச்சயமாகும். நமது கிறிஸ்தவ வாழ்விலே, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகின்ற வர்களாக, எவ்வித எண்ணத்தையும் தேவபிரசன்னத்தில் வைத்து நம்மை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. தவறானவற்றைச் சிறைப்பிடித்து அழித்துவிட கர்த்தர் கல்வாரியில் பெலனளித்திருக்கிறார் என்பதை விசுவாசிப்போம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

கட்டுக்கடங்காத மனஎண்ணங்களுடன் போராடுகிறேனா? நிச்சயம் விடுதலை உண்டு. நம்மை சீர்தூக்கிப் பார்ப்போம்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin