? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 58:1-5

?  முதலாவது

அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார்.  மத்தேயு 6:4, 6,18

தானதருமம், ஜெபம், உபவாசம், இவை யூதருடைய முக்கிய சமய காரியங்கள். ஆனால் ஆண்டவர், உண்மையான தானதருமம், உண்மையான ஜெபம், உண்மையான உபவாசம் எது என்பதை விளக்கிவிட்டு, இந்த வார்த்தையை மூன்றுதரமும் திருப்பித் திருப்பி சொன்னார் என்றால் அவர் எதை வலியுறுத்துகிறார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். இவைகள் நல்லதுதான்; ஆனால், நமக்கும் ஆண்டவருக்குமுள்ள உறவு சரியில்லாமல் எந்தவொரு சமயசடங்காசாரங்களும் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை; ஆக, நமது மனநோக்கை முதலில் சரிப்படுத்தவேண்டும்.

ஏசாயா 58 ம் அதிகாரம் என்றதும், ‘ஓ, அது உபவாசத்தைப்பற்றியது’ என்போம். ஆனால், ‘எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” என்றுதான் அந்த அதிகாரம் ஆரம்பிக்கிறது. இங்கே கர்த்தர் குறிப்பிடும் பாவம் என்ன? ‘தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல்…” அப்படியானால், அந்தமாதிரி போலியாக நடக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். அதாவது, சமய சடங்காசாரங்களில் தங்கள் மனதைச் செலுத்தி, ஆலயம் செல்லுவதிலும், உபவாசம் இருப்பதிலும், வேதாகமத்தை வாசிக்கக் கேட்பதிலும் அதிக கவனம் செலுத்தி, அவர்கள் தங்களைப் பக்திமான்களாக காட்டினார்கள் என்கிறார் கர்த்தர். அப்படியானால் ஆலயம் செல்லுவது தவறா? உபவாசிப்பது தவறா? வேதம் வாசிப்பது தவறா? இல்லை! ஆனால் கர்த்தர் விரும்புகிற முக்கிய காரியத்தைத் தவறவிட்டுவிட்டு, பாரம்பரியங்களுக்கும் சமய சடங்காசாரங்களுக்கும் முதலிடம் கொடுப்பது எப்படி என்பதை உணரும்படிக்கே ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

நாம் எதில் பழக்கப்பட்டிருக்கிறோம்? எதில் அஜாக்கிரதையாக இருக்கிறோம்? அதுதான் கர்த்தருடனான இதயபூர்வமான உறவு! இது ஞாயிறு ஆராதனையிலும் மேலானது; உபவாசத்திலும், வெளிப்படையான தானதருமத்திலும் மேலானது.

கர்த்தருடைய பிள்ளைகள் நமக்கு வெளிவாழ்வு, உள்வாழ்வு என்று இரட்டைவாழ்வு கிடையாது. கடந்த நாட்களில் ஆலயம் செல்லாமல் இருந்தது நம் எல்லோருக்கும் மிகவும் சங்கடமாகவே இருந்தது மெய்தான். சபைகூடுதல், கூடி ஆராதனை செய்தல், சபைக் கொண்டாட்டங்கள் எல்லாமே மிகுந்த சந்தோஷம்தான். ஆனால், அவற்றை ஒரு மதசடங்காசாரமாக, நமது ஆறுதலுக்காக, நமது சந்தோஷத்துக்காக, பக்திபரவசமாக, பழக்கப்பட்டு நிறைவேற்றினோமா? அல்லது தேவ அன்பின் உறவின் அடிப்படையில் செய்தோமா? இவற்றில் தேவன் மகிமைப்பட்டாரா? இவற்றைச் சிந்திப்போம்!

? இன்றைய சிந்தனைக்கு:

என் வாழ்வில் முதலிடம் எதற்கு? என் ஆண்டவருடனான மாசற்ற உறவை நாடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin