? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம்  18:16-33

செய்வதை வெளிப்படுத்தும் வார்த்தை

…நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? ஆதியாகமம் 18:18

இந்நாட்களிலே, இரகசிய “ஆச்சரியங்கள்” செய்து, உறவுகளை சந்தோஷத்தில் மூழ்கடித்து, அந்த சந்தோஷித்தில் சந்தோஷிக்கின்ற கலாச்சாரம் நம்முடையே அதிகமாகவே பரவியிருக்கிறது. அது மெய்யாகவே சந்தோஷம்தான். ஆனால், அந்தஆச்சரியமே, திகைப்பும், துக்கமும் தருமானால்… அதை ஏற்றுக்கொள்வீர்களா? இன்னொருபுறத்தில், “தவறுசெய்தால் அப்பா அடிப்பேன்” என்று சொல்லிய போதிலும்சில பிள்ளைகள் தவறு செய்யத்தான் செய்கின்றன. அப்போது பிள்ளையை தண்டிக்கவேண்டும். பிள்ளையை தண்டிக்காமல் விட்டால் பிள்ளைக்குப் பயம் விட்டுப்போகும்.

வேதாகமம் முழுமையையும் நோக்கினால், நாம் ஆராதிக்கின்ற தேவன், நமது பரம பிதா, முன்கூட்டியே சொன்னவைகள் நிகழாமல் தவறுவதில்லை. “நான் செய்யப் போவதை ஆபிரகாமுக்கு மறைப்பேனா?” என்ற தேவன், நோவா, மோசே, யோசுவா, சாமுவேல், தாவீது, தீர்க்கதரிசிகள் என்று யாருக்குத்தான் கர்த்தர் தாம் செய்யப் போவதை மறைத்தார்? பார்வோனிடம்கூட மோசேயை அனுப்பி எச்சரித்த பின்னர்தானே எகிப்துக்கு வாதையை அனுப்பினார். இஸ்ரவேலுக்குப் பலதடவைகள் முன் எச்சரிப்புக் கொடுத்தாரே. அப்படியே, இயேசுவும் தமது சீஷர்களுக்கு எல்லாவற்றையும் அறிவித்தார். சீஷர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். இவ்வுலகின் முடிவுவரை நடக்கப் போவதையும்கூட கர்த்தர் வார்த்தையாய் எழுதி தந்துவிட்டார்.

இனி நாம் என்ன சொல்லுவோம்? எமது தனிப்பட்ட வாழ்விலும், பொதுவிலும் நடப்பவற்றைக் குறித்து நாம் திகைப்பது ஏன்? எதிர்காலத்தைக் குறித்து கலங்குவது ஏன்? ஆபிரகாமைப்போலவே நாமும், நமது பிள்ளைகளையும், வீட்டாரையும் கர்த்தருடைய வழியில் நடத்தினால் கர்த்தர் தமது வார்த்தையின்படி பாதுகாப்பார் அல்லவா! தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டபடியேதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும், பலவித ஆச்சரியங்களுக்கு முகங்கொடுக்கும்போது மனுஷீகத்திலே நாம் கலங்குவதேன்? “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்,வெளிப்படுத்தப்பட்டவைகளோ, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றெக்கும் உரியவைகள்” (உபா.29:29) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. ஆககர்த்தர் நமக்கு எதுவுமே மறைக்கவேயில்லை. கர்த்தர் தாம் சென்னபடியே இரட்சகராகிய இயேசுவை நமக்குத் தந்தார். அப்படியே தாம் சொன்னபடியே இரண்டாம் வருகையில் தமது பிள்ளைகளை தம்முடன் சேர்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவரது வார்த்தையை விசுவாசித்து, கீழ்ப்படிவதே. அவரது வார்த்தையைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைக் கர்த்தர் உங்களுக்கு இன்று தந்தருளுவாராக. அன்றாடம் தேவனை அண்டி, அவரது வார்த்தை சொல்லுவதைக் கேட்டு அதைத் தியானித்து நடப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

ஆண்டவர் நமக்களித்த சந்தோஷ ஆச்சரியங்களை வாழ்வில் அனுபவித்திருக்கிறேனா? நன்றியுள்ள உணர்வு என்னிடமுண்டா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin