? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 7:8-14

கொடிய பாவம்

பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. ரோமர் 7:11

கொடிய வெப்பமுள்ள நாளிலே கடலிலே குளிப்பது இன்பமாகவே இருக்கும். கடல் அலைகளிலே மூழ்கி எழுந்து களித்திருக்கும்போது, “இவ்விடத்தில் “கடற்சுழி” உண்டு, ஜாக்கிரதை” என்ற ஒரு அறிவித்தல் பலகையைத் தற்செயலாகக் கண்டால் என்ன செய்வோம்? அந்த அறிவித்தலைக் குற்றம் சொல்லுவோமா? அல்லது, அதனை அந்த இடத்திலே வைத்தவனைக் குற்றம் சொல்லுவோமா? அல்லது, அந்த கடற்சுழியைத் தான் குற்றம் சொல்லுவோமா? தேவனுடைய நியாயப்பிரமாணம் பாவம் இன்னது என்று சுட்டிக்காட்டியிராவிட்டால், பாவம் இன்னது என்று நமக்கு எப்படித் தெரியும்? தேவன் தந்த பிரமாணங்களுக்காகத் தேவனுக்கு நன்றி சொல்லுவோமா!

பவுலடியார் தனது வாழ்விலே தான் சந்தித்த போராட்டங்களைக் குறித்து எவ்வளவு தெளிவாக, ஒளிவுமறைவின்றி, பிறர் பிரயோஜனத்திற்காக எழுதிவைத்துள்ளார் என்பதை எண்ணும்போது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்திராத நம்மையும் அவருடைய நேசம் அசைக்கிறது. பாவம் தன்னைக் கொன்றது என்கிறார். பிரமாணம் இல்லாவிட்டால் பாவத்தைத் தன்னால் உணர்ந்திருக்க முடியாது என்கிறார். உணர்ந்தபோது தான் செத்துவிட்டதாக எழுதுகிறார். பாவம் எவ்வளவு கொடியது. ஏதேன் தோட்டத்தில்கூட, ஏவாளுக்கு தேவன் அளித்த சுதந்திரத்திலிருந்து அவளுடைய கண்களைப் பிசாசானவன் எடுத்து, எதைச் செய்யக்கூடாது என்று தேவன் சொன்னாரோ அதற்கு நேராகத் திருப்பி விட்டான். இதுதான் அவன் செய்த வஞ்சகம். தேவன் எதைச் செய்யாதே என்று சொல்கிறாரோ, அதுவே நமக்கு இவ்வுலக வாழ்வில் அதிக இன்பம் தருகின்ற செயலாக இருக்கிறது. தவறான உறவு தவறு என்று நமக்குத் தெரியாதா? தெரியும். ஆனால், ஆரம்பத்திலே அது எவ்வளவு இன்பத்தை மனிதருக்குக் கொடுக்கிறது. அடிக்கடி சந்திக்கச் சொல்லும்; இதுதான் சரி என்றும் சொல்லும். அதுவே நம்மை அழிக்கும் கூரிய ஆயுதம் என்பதை உணரமுடியாதபடியும் செய்துவிடும்.

நமது மனதில் தோன்றும் எண்ணங்களைத் தேவனுடைய வார்த்தையோடு சேர்த்துச் சிந்திப்பது மிக அவசியம். எப்பொழுதெல்லாம் தேவசித்தத்திற்கு எதிராகச் செயற்படும் படி நமது மனதிலே எண்ணம் தோன்றுகிறதோ, அந்தக் கணமே, சிலுவையில் ஆண்டவர் வெளிப்படுத்திய ஒப்பற்ற அன்பை ஒரு தரம் நினைத்துப் பார்ப்போம். அப்போது, நம்மைத் தீமை அணுகக்கூடாது, தம்மைவிட்டு நம்மை எதுவும் பிரித்துப்போடக்கூடாது என்பதற் காகவே, தேவன் நம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது விளங்கும். தேவனுடைய கரத்துக்குள்தான் நமக்குப் பாதுகாப்பு; விலகினால் நாம் அழிந்து போவோம். நம்மை ஆராய்ந்து பார்ப்போமா!

? இன்றைய சிந்தனைக்கு:

பாவம் என்பது மகா கொடியது என்ற உண்மையை நான் அறிந்திருந்தும், பாவம் என்னை மேற்கொள்ள நான் இடமளிப்பது சரியா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin