? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ரோமர் 1:1-12

உங்கள் விசுவாசம்

உங்கள் விசுவாசம் உலகெங்கிலும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்கள் எல்லாருக்காகவும் இயேசுக்கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ரோமர் 1:8

மகளின் சரீரத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால், அவள் கர்ப்பமான காலத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக அவளது சுகப்பிரசவத்திற்காக ஜெபித்து வந்தார் ஒரு தந்தை. கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு மகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, ஆஸ்பத்திரிக்கு வெளியில் இருந்து அழ ஆரம்பித்துவிட்டார். அப்படியானால் ஒன்பது மாதங்களாக அவர் ஜெபித்த ஜெபத்திற்கு என்ன பதில்? அவரது விசுவாசம் எங்கே? கடைசியில் மகள் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஒருகணம் அவரது விசுவாசம் ஆட்டங்கண்டதல்லவா?

விசுவாசம் என்பது, எல்லாமே நன்றாக இருக்கும்போதல்ல, சூழ்நிலைகளுக்கப்பால் நாம் தேவனை நம்பித் திடனாக நிற்பதிலேயே தங்கியுள்ளது@ விசுவாசத்தின் உறுதியும் அதில்தான் அடங்கியுள்ளது. ஒரு காரியத்துக்காக நாம் ஓயாது ஜெபிக்கிறோம்; ஆனாலும் நாம் எதிர்பார்த்ததுபோல பதில் அமையாவிட்டால் குழம்பிவிடுகிறோம். அப்படியானால் நாம் இவ்வளவு காலமும் எந்த விசுவாசத்தில் ஜெபித்தோம்? கர்த்தர் நன்மையானதையே தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இல்லாமற்போனதா? நாம் விசுவாசத்தில் உறுதிப்பட்டால்தான் பிறருக்கு அதைக் குறித்துச் சாட்சிபகரமுடியும்.

‘உங்கள் விசுவாசம் உலகெங்கிலும் பிரசித்தமாகிறபடியால் இயேசுக் கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று ரோமருக்கு எழுதுகிறார் பவுல். ஆம், நமக்குள் வேர்கொண்டிருக்கும் விசுவாசமே பிரசித்தமாக முடியும். மேலும், ‘உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடே கூட நானும் ஆறுதல் அடையும்படிக்கு உங்களைக் காண வாஞ்சையாய் இருக்கிறேன்” என்கிறார் பவுல். நமக்குள் உள்ள விசுவாசம் நம்மை மாத்திரமல்ல, நாம் ஒருவரையொருவர் ஆறுதல் படுத்தவும் செய்யும். அன்று சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், தாங்கள் ஆராதிக்கிற தேவனைத்தவிர எந்தச் சிலையையும் வணங்குவதில்லை என்பதில் உறுதியாயிருந்தார்கள்.

அதனால் அக்கினிச் சூளையில் போடப்படவேண்டிய சூழ்நிலை வந்தபோதும் அவர்கள் விசுவாசத்தில் சற்றேனும் தளராமல், எதற்கும் தயாராக இருந்தார்கள். ‘நாம் ஆராதிக்கும் தேவன் எம்மைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அப்படி அவர் தப்புவியாமற் போனாலும் நாங்கள் நீர் உருவாக்கின பொற்சிலையை வணங்கமாட்டோம்” என்று உறுதியாகக் கூறினர். இதுதான் விசுவாசம். இந்த விசுவாசத்தைத்தான் நாம் உலகெங்கிலும் பிரசித்தப்படுத்த வேண்டும். இன்று நீங்கள் விசுவாசத்தைக் கிரியைகளுக்கூடாகப் பிரசித்தப்படுத்துவீர்களா? ‘வீணான மனுசனே கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?” யாக்கோபு 2:20.

? இன்றைய சிந்தனைக்கு:

நமது விசுவாச வாழ்வில் நாம் எங்கே நிற்கிறோம்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin