? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 6:5-6, 16-18

அந்தரங்கமா? பகிரங்கமா?

…அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:4

“நீங்கள் எவ்வளவு நேரம் ஜெபிக்கின்றீர்கள்” என்று ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். கேட்பது ஏன் என்று வினவியபோது, அதே நபர், “ஒருவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அதனால் அளவிடமுடியும்” என்று கூறியதுடன், “நான் ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் ஜெபிப்பேன்” என்றும் சொன்னார். ஜெபம் ஆவிக்குரிய வாழ்க்கை யின் அளவுகோல் அல்ல. ஆனால், ஜெபம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிக அவசியமானது. இந்த அவசிய ஜெப உறவு அந்தரங்கத்தில் இருக்கவேண்டியதே அல்லாமல் அம்பலப்படுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கக்கூடாது. “நீயோ ஜெபம்பண்ணும்போது உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” என்று இயேசு தமது சீஷருக்குக் கற்றுக்கொடுத்தார்.

 மாய்மாலம்பண்ணுகிறவர்கள் தாங்கள் ஜெபிக்கிறவர்கள் என்று பிறருக்குக் காண்பிக் கும்படி மனுஷர் காணும்படியாக ஜெபம்பண்ண விரும்பினார்கள். ஆனால் தம்முடைய சீஷர்கள் அப்படித் தவறான நோக்கத்துடன் ஜெபிக்கக்கூடாது என்று இயேசு விரும்பினார். அதற்காக, கதவைப் பூட்டி ஜெபித்துவிட்டு, நான் இவ்வளவு நேரமாக ஜெபித்துக் கொண்டிருந்தேன் என்று அம்பலப்படுத்துவதும் தவறு. இப்படி அந்தரங்கத்தில் செய்யப் படும் பல ஜெபங்கள் சாட்சி என்ற போர்வையில் பகிரங்கமாக்கப்படுவதும் உண்டு. இதை அறிந்து பிறர் அவர்களைப் புகழ்ந்து பெருமைப்படுத்தலாமல்லவா! இதுவும் ஆபத்து. ஜெபநேரம் என்பது என் தேவனுக்கும், எனக்கும் உள்ள நெருக்கத்தின் பிரதிபலிப்பாக நமக்குள் உறவை வளர்த்துக்கொள்ளும் நேரமல்லவா! அதைப் பிறர் அறியவேண்டியது ஏன்?

இந்த நாகரீக உலகில் அந்தரங்கமானது, தனிப்பட்டது என்ற விடயம் அருகிவருகிறது. மாத்திரமல்ல, இந்த நெருக்கமான நாட்களில் பலவித ஜெபங்கள் இணையத்தளத்தி னூடாக நடக்கின்றன. நல்லது. ஆனால் எனக்கும் என் தேவனுக்கும் இடையே உள்ள அந்தரங்க உறவுக்கு இன்றைய தொழில்நுட்பம் உதவாது. நீண்ட ஜெபங்கள், பகிரங்க ஜெபங்கள், அடுக்கு மொழி ஜெபங்கள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், என் அந்தரங்க ஜெபம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? அடுத்தது, பிறர் முன்பாக நான் ஜெபிக்கும்போது என் நோக்கம் என்ன? பிறர் என்னை ஜெபிக்கிறவன் என்று நோக்கவேண்டுமென்பதா? அல்லது என்னை ஆவிக்குரியவன் என்று காண்பிக்கவா? பிறரின் புகழ்ச்சியை நாடிப் பெற்றுக்கொள்கிறவன் தன் பலனை இந்த உலகிலேயே அடைந்துவிடுவான். அது நமக்கு வேண்டாமே. நாம் தேவனோடு செய்யும் அந்தரங்க ஜெபம் நிச்சயமாகவே வெளியரங்கமான பதிலைத் தரும். மாத்திரமல்ல, பிறர் முன்னிலையில் ஜெபிக்கும் போது அது நம்மைக் கட்டுப்படுத்தும்.

? இன்றைய சிந்தனைக்கு:  

என் ஜெபம் எப்படிப்பட்டது? உண்மை உள்ளத்துடன் ஆராய்ந்து இப்போதே தேவ பாதத்தில் மண்டியிடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin