? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 26:9-25

? தேவபயம்

என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால் அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக. 1சாமுவேல் 26:24

விழுந்துபோன மனிதகுணத்தை அறிவீர்களா? பழிக்குப் பழி, பகையாளிக்குத் தீங்கு செய்தல், பகையுணர்வைக் காட்டுதல் ஆகியவற்றை ஆதாம், காயீன் வாழ்விலும் காண்கிறோம். ஆனால், தேவபயம் என்பது அழகான சிறப்பான மானிட வாழ்வை மேம்படுத்துகின்ற ஒரு விடயம். இது இருந்தால், அன்பு, மன்னிப்பு, நீடிய பொறுமை எல்லாமே நமது அலங்காரமாயிருக்கும். எப்படி? ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு அசைவையும் கூட தேவன் பார்க்கிறார் என்ற உணர்வு நமக்குள் வேர்விட்டிருக்குமானால், பகைக்குப் பதில் பணிவும், ஆத்திரத்திற்குப் பதில் ஆதரவும், அன்பும் மன்னிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளிருந்து பிரவாகித்து பாயும். இன்று நம்மில் பிரவாகிப்பது எது?

நான் ஆண்டவருக்குள் விடுதலைபெற்று வேதாகமத்தை முதன்முறையாக உணர்வோடு வாசிக்க ஆரம்பித்தபோது, தாவீதைக் குறித்து, இப்படியும் ஒரு மனுஷனா? தாவீது சவுலுக்கு செய்ததை மன்னிப்பு என்பதா? நீடிய பொறுமை என்பதா? தேவபயம் என்பதா? எனக்குள் அன்று குழப்பம்தான் ஏற்பட்டது. தாவீதை கொன்றுபோட எண்ணுமளவுக்கு தாவீது சவுலுக்குச் செய்த குற்றம் என்ன? எதுவுமே இல்லை. இருந்தும், தாவீது விலகி ஓடினானே தவிர, சவுலை எதிர்க்கவுமில்லை, பழிவாங்க எண்ணவுமில்லை. இத்தனைக்கும் கர்த்தர் சவுலைத் தள்ளிப்போட்டிருந்தார். அப்படியிருந்தும் தாவீது சொன்னது என்ன? ‘கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மாpத்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, நான் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் கைபோடாதபடிக்கு கர்த்தர் என்னைக் காக்கக்கடவர்” என்று ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு’ என்று சொல்லி தனக்குத் தானே ஒரு வேலியைப் போட்டுக்கொண்டார் தாவீது.

ராஜாங்கத்தையும் விட்டுவிட்டு தன்னைக் கொல்ல துரத்தி திரிந்தவனைக் கொல்ல இருதடவை தருணம் கிடைத்தும் தாவீது அவனை தப்பவிட்டது, தாவீதின் மன்னிப்பின் சிந்தையா? தேவபயமா? கிறிஸ்து, தாம் தேவனாயிருந்தும் தமது வல்லமையை தம்மை கொலை செய்தவர்கள்மீது காட்டவில்லை, மாறாக அவர்களுடைய மன்னிப்புக்காக தாமே இரங்கி ஜெபித்தார். எப்படி? தன் பிதாவின் சித்தம் செய்துமுடிப்பதே அவருடைய ஒரே நோக்கமாயிருந்ததே தவிர, தன்னைப் பாதுகாக்க அவர் முனையவில்லை. இன்று இயேசுவின் சிந்தையை, அவர் காட்டிய உன்னத வழியை அறிந்து உணர்ந்த நாம் தேவ பயத்துடன், பிறரை நடத்துகிறோமா? கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு, அவன் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நீதிமொழிகள் 14:26,27.

? இன்றைய சிந்தனைக்கு :

எனது எல்லா அசைவுகளையும், மனஎண்ணங்களையும் தேவன் காண்கிறார் என்ற உணர்வு எனக்குண்டா?

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin