­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 10:32-45

மூன்றாம் தடவையாவது…

…அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், …தமக்குச் சம்பவிக்கப்போகிற வைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத் தொடங்கினார். மாற்.10:32

ஒரு விடயத்தை ஒருவரிடம் சொன்னால், திரும்பவும் சொல்லும்படி கேட்டாலே நமக்கு வெறுப்புண்டாகிறது. ஆனால் இங்கே, தமது சீஷர்களுடைய செவிகளில் விழுவது அவர்கள் மனங்களில் பதியவில்லை என்று அறிந்த இயேசு தாமே, தமக்கு வரவிருந்த மரணத்தைக்குறித்து மூன்றாவது தடவை கூறுகிறார். தங்களுக்கு இது பற்றித் தெரியாது என்று சீஷர்கள் சொல்லவேமுடியாதபடி ஒருதடவைக்கு மூன்று தடவைகளாக இயேசு திரும்பவும் சொல்லத் தொடங்கினார். ஆனால் அவர்கள் உணர்ந்தார்களா?

இதுவே எருசலேமுக்கான தமது கடைசிப்பயணம் என்பதை இயேசு அறிந்தவராகப் பேசுகிறார். முதல் இரண்டு தடவைகளும் தாம் அடையப்போகின்ற பாடு மரணம் உயிர்ப் பைக்குறித்து கூறிய இயேசு, இந்த மூன்றாம் தடவையில், எருசலேமிலேயே தாம் மரண மடைவதாகக் கூறுகிறார். அப்போதாவது சீஷர்கள் உணர்வடைந்தார்களா? இல்லை. அதற்கு மாறாக, யாக்கோபும் யோவானும், தங்கள் உயர்பதவி பற்றிக் கனவு காண்கிறார்கள். மத்தேயு எழுதியபடி தங்கள் தாயையும் கூட்டிவந்து, தாங்கள் கேட்பதைச் செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள். மொத்தத்தில் இயேசு தங்களுக்குச் சொன்ன எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேயில்லை. மேசியா என்றால், அவர் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார், தங்களுக்குப் பதவிகள் கிட்டும் என்றே எண்ணினர். இயேசு உயிர்ப்பைக் குறித்து; பேசியது அவர்கள் காதுகளில் விழவேயில்லை. இந்தச்சமயத்தில் இயேசுவின் உள்ளம் எவ்வளவு பாரப்பட்டிருக்கும்! “நான் என்ன செய்யவேண்டும்” என்று இயேசு கேட்க, ஸ்தாபிக்கப்போகின்ற ராஜ்யத்தில் தாங்கள் இருவரும் வலது இடதுபுறத்தில், அதாவது ராஜ ஸ்தானத்தில் உட்கார அருள்செய்யவேண்டும் என்கிறார்கள். ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இயேசுவோடே நடந்த இந்த சீஷர்களால் அவருடைய எளிமையான வாழ்வையோ, அவருடைய மனதையோ உணரமுடியாதுபோனதென்ன? இவரே இஸ்ரவேலுக்கு மீட்பு அருளி, தமது ராஜ்யத்தை இந்த உலகத்தில் ஸ்தாபிக்கிறவர் என்ற கனவிலேயே அவர்கள் இருந்தார்கள். உயர் பதவி, அந்தஸ்து ஆசை அவர்கள் கண்களை மறைத்துப்போட்டது.

இந்த இறுதிப் பயணத்தில்தான் சீஷர்களும் மக்களும் இயேசுவைக் கழுதையில் ஏற்றி குருத்தோலைப் பிடித்து ஒரு ராஜாவாக எருசலேமுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று குருத்தோலை ஞாயிறு. பாரம்பரியமாக சில காரியங்களை, நவீனமான முறைகளிலே ஆலயங்களில் முன்னெடுக்கிற நாம், மரணத்தை எதிர்கொண்டு எருசலேமுக்குச் சென்ற இயேசுவின் மனதை உணராத சீஷர்கள் போலவா இருக்கிறோமா? அந்த சிலுவை மரணத்தை உத்தரித்து, உயிர்த்த இயேசுவின் மனநோக்கு என்ன என்பதை இன்று நாமும் உணர்ந்துதான் எல்லாவற்றையும் செய்கிறோமா? அல்லது அன்றைய சீஷர்களைப்போல உணர்வின்றி நடக்கிறோமா?

💫 இன்றைய சிந்தனைக்கு: :

வருடாவருடம் குருத்தோலை ஞாயிறைக் கடைப்பிடித்து, குருத்தோலையில் செய்கின்ற ஒரு சிலுவையை எடுத்துக்கொள்கின்ற எனது மனநோக்கு என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

2 thoughts on “10 ஏப்ரல், 2022 ஞாயிறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin