? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 4:21-26

சினம் வேண்டாம்

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்… எபேசியர் 4:26

ஒருவர் உங்களைக் கடுப்பேற்றும் விதமாக தொலைபேசியில் தகாத வார்த்தைகளைப் பாவித்துப் பேசும்போது, தொலைபேசியை உடைத்தெறிய வேண்டும்போல கோபம் வருமா, வராதா! கோபம் யாருக்குத்தான் வருவதில்லை,அப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாழுகிறோம். கோபமே வெளிக்காட்டாதவர்களும் இருக்கிறார்கள்,அவர்களது உள்மனது எப்படி என்பதை யார் அறிவார். பவுலடியாரே, ‘கோபங்கொண்டாலும்…’ என்று பச்சைக்கொடி காட்டியிருப்பதில் கோபம்கொள்வது பரவாயில்லை என்று நாம் சாட்டுச் சொல்லலாம். ஆனால் மெய்யாகவே கோபப்படவேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.

தேவாலய முற்றத்தைக் கள்ளர் குகையாக்கியதைக் கண்ட ஆண்டவர் கோபங்கொண்டார். ஆம், தேவநாமம் அவமதிக்கப்படும்போது கோபம் வரத்தான் வேண்டும். பிறர் தரக்குறைவாக நடத்தப்படுவதைக் காணும்போது கோபம் வரத்தான் வேண்டும். அதாவது, தேவனுக்காகவும் பிறருக்காகவும் கோபப்படுவதில் நியாயம் உண்டு. ஆனால், நமது கோபம் எல்லாம் நமது சுயகாரியமாகவே இருக்கிறது என்பதுதான் சிந்திக்கவேண்டிய விடயம். தேவனுக்காகச் சிங்கத்தைப் போலவும், நமக்காக ஆட்டுக்குட்டியைப் போலவும் வாழவே இயேசு நமக்கு மாதிரியை வைத்துள்ளார். நமது கோபஉணர்வு தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டியதின் அவசியத்தை அது தெளிவுபடுத்தியிருக்கிறது. போத்தலுக்குள் அடைக்கப்பட்ட சோடா போன்றதுதான் கோபஉணர்வும். மூடி கவனமின்றித் திறக்கப்படுமாயின் பல சேதங்கள் ஏற்படும், நம்மையும் காயப்படுத்தும்,உள்ளங்களை அது உடைக்கும், உறவுகளைச் சிதைக்கும். ஆகவேதான், அந்தக் கோபத்தை உடனே சரிசெய்யும்படி பவுல் புத்திசொல்லுகிறார். கோபத்திற்கு இடமளிப்பது சாத்தானுக்கு இடமளிப்பதற்குச் சமம். சிலசமயங்களில் நீதியுள்ள கோபம்கூட மூடியை உடைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக வெளிவருமானால், அது கடுங்கோபமாக உருவெடுத்து அழிவையும் ஏற்படுத்திவிடும்.

‘கோபங்கொண்டாலும்…’ என சங்கீதம் 4:4 கூறினாலும், நீடியபொறுமை, நீடிய சாந்தத்தைக்குறித்தும் வேதாகமம் கூறுகிறது. நமக்குக் கோபம் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்தாலும் அது பாவமாக மாற நாம் இடமளிக்கக்கூடாது. அந்தநாள் முடியும்முன்னரே அதைச் சரிப்படுத்துவதுதான் நமக்கும் பிறருக்கும் நல்லது, தேவனுடைய நாமமும் மகிமைப்படும். எப்படி இது சாத்தியமாகும்? அதற்கு ஒரே வழி ஆண்டவர் இயேசுவை நோக்குவதுதான். தமக்கு அநீதி இழைக்கப்பட்டு, அநியாயமாய் அடிக்கப்பட்டு அறையப் பட்டபோதும்கூட, ஆண்டவர் அந்த சூழ்நிலையை எப்படிச் சந்தித்தார் என்பதைச் சிந்திப்போம். நமது கோபம் ஆறிவிடுவது உறுதி.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று நாம் யாரோடாவது கோபமாக இருக்கிறோமா? இனியும் தாமதம் வேண்டாம். நாளை நாம் இருப்போமோ யார் அறிவார்! இன்றே, இப்போதே அதைச் சரிசெய்யத் தேவ உதவியை நாடுவோமாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin