? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 136:1-9

கர்த்தரைத் துதியுங்கள்!

கர்த்தரை துதியுங்கள். அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1

துதி என்பது இன்று நமக்குப் பழக்கமான ஒன்றாகிவிட்டது. என்றாலும், நெருக்கம் மிகுந்த இந்தக் காலப்பகுதியில் எப்படித் துதிப்பது என்று சிலருக்கு ஒருவித குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. துதி, ஸ்தோத்திரம், விண்ணப்பம் எல்லாமே ஜெபத்தின் அம்சங்களே. சுருங்கச்சொன்னால், துதி என்பது தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் போற்றுவது; ஸ்தோத்திரம் என்பது கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் நன்றி செலுத்து வது; விண்ணப்பம் என்பது பிறர் தேவைகளுக்காக, பின்னர் நமது தேவைக்காக மன்றாடுவது. துதி என்பது உதடுகளிலிருந்து அல்ல. அது இருதயத்தின் ஆழத்தி லிருந்து எழுந்துவர வேண்டும். ஆனால், இந்தக் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட இந்த மனநிலையில் எப்படித் துதிப்பது என்று பலர் கேட்பதுண்டு.

சங்கீதக்காரன் “கர்த்தரைத் துதியுங்கள்” என்று எல்லோரையும் அழைக்கிறான். எதற்காகத் துதிக்கவேண்டுமாம்? அவர் நல்லவராக இருப்பதற்காக, அவரது கிருபை என்றென்றைக்கும் இருப்பதற்காக, ஒருவராய், பெரிய அதிசயங்களைச் செய்வதற்காக, வானங்களை உண்டாக்கியதற்காக, பூமியை உண்டாக்கியதற்காக, சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இப்படியாக இயற்கைகள் அனைத்திற்காகவும் கர்த்தரைத் துதிக்கும் படியாகக் கூறுகின்றான். ஏன் இயற்கைக்காகக் கர்த்தரை நாம் துதிக்கவேண்டும்? கர்த்தர் நமக்காகத்தானே இயற்கையைப் படைத்தார். அது தரும் ஒளி, வெப்பம், காற்று, தண்ணீர் என்று எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிக்கிறோமல்லவா! இந்த இயற்கை இல்லாவிட்டால் நாமும் இல்லை. இப்படியிருக்க கர்த்தர் சிருஷ்டித்து தந்த இந்த இயற்கைக்காகத் தேவனைத் துதிக்காமல் இருப்பது எப்படி?

கர்த்தர் எல்லா இயற்கைக்கும் மேலானவர்; கொள்ளைநோய்க்கும் மேலானவர். அவர் நமக்கு நல்லவராக இருக்கவில்லையா? பாவிகளாகிய நம்மையும் நேசித்த அவருடைய கிருபையை நினைத்தாலே வாழ்நாட்கள் முழுவதும் கர்த்தரைத் துதிக்கலாமே! காலையில் சூரியன் உதிக்காவிட்டால், மாலையில் அஸ்தமிக்காவிட்டால், என்னவா கும் என்று சிந்தித்துப்பார்ப்போம். காற்று நின்றுபோனால் நாம் செத்துவிடுவோமே! நீரூற்றுக்கள்வற்றிப்போனால் நமது நிலை என்ன? நம் கண்கள் காண்கின்ற பச்சையான மரம், செடி, கொடிகள், புற்கள்கூட இல்லாவிட்டால் நமது உலகம் எப்படியிருக்கும்? இக் கொள்ளைநோய் காலத்தில் எத்தனை இயற்கை மூலிகைகள் நமக்குக் கைகொடுத்திருக்கின்றன. காற்றிலுள்ள ஒட்சிசன் வாயுவின் அருமை இப்போதுதானே நமக்குத் தெரிகிறது. இப்போது சொல்லுங்கள்; நமது பிதாவாகிய தேவன் எவ்வளவு நல்லவர். மனதார அவரை, அவருக்காக, அவருடைய சிருஷ்டிப்பு களுக்காக அவரை மனதாரத் துதிப்போமா! கர்த்தரை துதியுங்கள். அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1 கர்த்தரைத் துதியுங்கள்! சங்கீதம் 136:1-9

? இன்றைய சிந்தனைக்கு:  

ஒரு விநாடி ஒதுக்கி நம்மைச் சுற்றியிருக்கின்ற இயற்கை யைச் சிந்தித்துப் பார்ப்போம். நம் நாவில் தானாகவே துதி எழும்பட்டும்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin