? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலாத்தியர் 6:1-10

?  விதைத்ததையே அறுப்போம்

மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7

ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால், அதைக் குத்திக்காட்டியே அவனை மீண்டும் எழும்ப முடியாதபடிக்கு பள்ளத்தில் தள்ளிவிடும் ஒரு சமுதாயத்தின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே பவுல், ‘ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்” என கலாத்தியருக்கும் இன்று நமக்கும் சுட்டிக்காட்டுகிறார். குற்றத்தில் விழுந்தவனை அப்படியே அழிந்துபோக நாம் விட்டுவிடமுடியாது, காரணம், அவனையும் தேவன் நேசிக்கிறார். அவனை மீண்டும் மனந்திரும்பி வாழும் ஒரு வாழ்வுக்குள் வழிநடத்துவது அவசியம். அதேவேளை அவனை வழிநடத்துபவர்களும் சோதனைக்குள் விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்பதே பவுல் கூறும் ஆலோசனை.

மேலும், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்பதையும் பவுல் இங்கே நினைவுபடுத்துகிறார். இது நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய சத்தியம். நாம் எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று நினைக்க முடியாது. நாம் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதாகமம் எமக்குப் போதிக்கிறது. அதை நாம் கடைப்பிடித்து வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாய் அவருக்குச் சாட்சிகளாய் வாழவேண்டியவர்கள். அப்படியாயின் அவருடைய சத்திய வார்த்தைகளும் எம்மில் வாழவேண்டுமல்லவா? நாம் எம்மைச் சரிப்படுத்தி அவர் பாதையில் நேர்த்தியாய் நடக்கவேண்டும். அதேவேளை தப்பிதத்தில் விழுந்தவனைப் பார்த்து, ‘நீ எதை விதைத்தாயோ அதை இப்போது அறுத்துக்கொண்டிருக்கிறாய்” என்று சொல்லி அவனை வேதனைப்படுத்தவும் கூடாது. அவனும் மீண்டும் மனந்திரும்பி தேவனுடைய பாதைக்குள் வரவேண்டுமென்பதே எமது நோக்கமாய் இருக்கவேண்டும். எனவே, விழுந்தவனை மீண்டும் தூக்கி நிறுத்தும் பொறுப்பு எம்முடையதே.

பிரியமானவர்களே, இன்று நம்முடைய நிலை என்ன என்பதை உணர்ந்திருக்கிறோமா? நாமும் முன்னர் விழுந்துகிடந்தவர்கள்தான், தேவன் நம்மைத் தூக்கியெடுத்தாரல்லவா என்ற நினைவு நமக்கு அவசியம். அப்போது விழுந்தவனைத் தூக்கி நிறுத்த நாம் தயங்கமாட்டோம். நாம் முதலில் கிறிஸ்துவுக்குள் நிலையாய் நிற்போமாக. எனவே  தினமும் தேவசமுகத்தில் இருந்து எம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.  தேவ ஆவியானவர் எம்மை ஆராய்ந்து பார்த்துத் திருத்த நாம் அவாpடம் முற்றிலுமாய் நம்மைக் கொடுத்துவிடுவோமாக. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று, எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 1கொரிந்தியர் 10:12.

? இன்றைய சிந்தனைக்கு:

என் வாழ்வில் ஏற்பட்ட விழுகைகளையும், அதிலிருந்து ஆண்டவர் என்னைத் தூக்கி நிறுத்திய சந்தர்ப்பங்களையும் எண்ணிப் பார்ப்பேனாக.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin