? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 12:1-11

?  சொந்த வீட்டார் வெறுத்தாலும்..

கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர். எரேமியா 12:3

‘தேவனைத் தேடினால் உலக செழிப்புக்கள் கிடைக்கும்” என்பது நவீன போதனை; அதையே பல கிறிஸ்தவர்களும் கருதுகிறார்கள். ஆனால், தேவனைத் தேடுகிறவர்களுக்கு உலக செழிப்புக்கள் கிடைக்கவேண்டும் என்பது ஒன்றுதான் தேவசித்தமல்ல. அது கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம். காரியம் அதுவல்ல. எரேமியா தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து, தேவன் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றத்தையோ, செழிப்பையோ அவர் காணவில்லை. அதற்குப் பதிலாக சிறையிலும், தண்ணீரற்ற துரவிலுமே போடப்பட்டார். அவருடைய விருப்பத்திற்கு மாறாக எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஜனங்களின் வெறுப்புக்குள்ளானார். அவரது சொந்த ஆனதோத்தின் பட்டணத்தாரே அவரைக் கொலைசெய்ய வகை தேடினார்கள். இப்படியாக அவர் அதிக வாஞ்சையோடு தேவனுக்கு ஊழியம் செய்தபோதும், அவருடைய சொந்த வாழ்க்கை கடினமாகவே இருந்தது. எரேமியாவுக்கு அவரது சகோதரரும், தகப்பன் வீட்டாரும் துரோகம் புரிந்தனர். அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து பரியாசம் செய்தனர். அதனால் அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறவேண்டியதாயிற்று. இத்தனைக்கும் மத்தியிலும் எரேமியா கலங்கவில்லை. ஏனென்றால், தனது இருதயத்தைக் கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற உறுதி எரேமியாவுக்கு இருந்தது. ஆகவே, அவரும் தன் இருதயத்தைத் தேவனுக்கு நேராகவே வைத்திருந்தார். மக்கள் தன்னை வெறுத்தாலும், வீட்டார் தன்னைத் தள்ளினாலும், தேவன் தன்னைக் காண்கிறார் என்ற உறுதி அவருக்குள் இருந்தது.

இன்று நமது மனநிலை என்ன? கிறிஸ்தவர்களாகிய நாம் எந்தக் கண்ணோட்டத்துடன் நம்மையும் மற்றவர்களையும் பார்க்கிறோம்? அவரவருக்கு இருக்கும் பண வசதிகளைக்கொண்டு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், பாடுகளுக்குள் இருக்கிறவர்கள் கைவிடப்பட்டவர்கள் என்றும் நியாயந்தீர்க்கிறோமா? காரியம் அதுவல்ல. தேவனுடைய வார்த்தையினிமித்தம் பெற்றோர் உற்றோர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், நாம் தேவனுக்காக நிலைத்து நிற்கிறோமா என்பதுவே கேள்வி. கர்த்தர் நமது இருதயத்தையே பார்க்கிறார். கர்த்தருக்கு முன்பாக நமது இருதயம் எப்படி இருக்கிறது என்பதே நாம் கவனிக்கத்தக்க முக்கிய காரியம். தேவபிள்ளையே, எல்லாமே உனக்கு எதிராக வந்தாலும் நீ கர்த்தருக்குள் உறுதியாக இருப்பாயா? சொந்த இனத்தாரும் வீட்டாரும் உனக்கெதிராக எழும்பினாலும் உன் இருதயம் கர்த்தரையே நினைத்திருக்குமா? தேவனுக்காகப் பாடுகள் சகிப்பது பாக்கியமான காhpயம் என்பதை நாம் உணரவேண்டும். நமது தேவன் நம்மைக் காண்கின்றார். அந்த உறுதியில் தளர்ந்து விடாதிருப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  என்ன வந்தாலும் எது நேர்ந்தாலும், தேவனுக்குள் உறுதியாய் நின்று, அவரை மாத்திரமே திருப்திப்படுத்தி வாழுவேனா?

? இன்றைய விண்ணப்பம்

எமது ஊழியர் குழுவிற்காக ஜெபியுங்கள், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் எம்மை சரிசெய்துகொண்டு, எமது பொறுப்புக்களிலும் இலக்குகளிலும் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் பணிகளை செயல்படுத்தவும், கர்த்தர் நமக்கு ஒப்படைத்துள்ள ஊழிய பணிகளை நிறைவேற்றிடவும் மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் https://www.facebook.com/sathiyavasanam/ முகப்புத்தகத்தில் வாசிக்கலாம். நன்றி.)

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin