PDF MAY 13
? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 38:1-7

?  துரவில் போடப்பட்டாலும்…

அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது.
அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
எரேமியா 38:6

அன்று தீர்க்கதரிசி எரேமியா அனுபவித்த பாடுகளும், பின்னர் பவுல் அனுபவித்த பாடுகளும் மிகக் கொடுமையானவையே. மக்கள் தேவ வார்த்தைக்குச் செவிகொடுக்க வேண்டும் என்பதற்காகவே இருவரும் பாடுபட்டார்கள். அவர்கள் தம்மைப் பாதுகாத்திட முற்படாமல் தமது மக்கள் பாதுகாப்படையும்படி தேவனுடைய வார்த்தைகளைத் தைரியமாக அறிவித்தார்கள். இன்றைய நாளிலே இதுவரை நமக்கு தேவ வார்த்தைகளை அறிவித்த தேவதாசர்களைக்குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போமாக! அவர்கள் பயமின்றி அறிவித்திராவிட்டால் நாம் எப்படி ஆண்டவரை அறிந்திருப்போம்!

எரேமியா தேவனுக்குப் பயந்தவர், தேவனின் வார்த்தைகளை மக்களுக்கு அறிவித்தவர். மக்களுடைய சுகத்திற்காக, நல்வாழ்வுக்காக ஜெபித்தவர். எனினும் எல்லாவற்றையும்விட கடவுள் சித்தப்படியே யாவும் நடக்கும் என்பதை ஆணித்தரமாகக் கூறியதாலேயே பாடுகளை அனுபவித்தார். சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும், மீண்டும் ஒரு பாழடைந்த தண்ணீர் அற்ற துரவில் போடப்பட்டார். இன்று ஆண்டவருக்காக பாடுகள்படவும், நம்மூலமாக அவர் மகிமைப்படவும் நம்மைத் தர நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? நம்மை யார் அறியாவிட்டாலும், நம்மைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்.

தனது மக்கள் தன்னை வெறுப்பதை அறிந்தும் எரேமியா தனது மக்கள் அழிந்துபோகக் கூடாது என்பதில் அக்கறையாயிருந்தார். தேவனுடைய வார்த்தைகளை அறிவித்து, அவர்கள் தங்கள் ஜீவனைப் பாதுகாத்துக்கொள்ள வழிகாட்டினார். எரேமியா துரவிலே போடப்பட்டபோதும், தேவனையோ, மக்களையோ அவர் வெறுக்கவில்லை; மாறாக, தனது வாழ்வில் நடக்கின்ற யாவும் தேவ சித்தப்படியே நடக்கின்றன என்பதை ஏற்று சகலத்தையும் சகித்தார். தேவனும் அவரைப் பராமரித்தார், காத்துக்கொண்டார்.

இயேசுவும் மக்கள் மத்தியிலேயே வாழ்ந்தார்; எனினும், அவர்களால் புறக்கணிக்கப்பட்டார்; ஆனாலும் அவர் மக்களை நேசித்தார். இந்த ஆண்டவரின் வழியில் இன்று நானும் நிற்கிறேனா? இன்று நாம் ஒரு தீர்க்கதரிசியாகவோ, ஊழியக்காரனாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் மக்கள் நரகத்திற்கு போய்விடக்கூடாது என்ற ஆத்துமபாரம் நமக்குண்டா என்பதுதான் கேள்வி. அப்படி இருக்குமானால் தேவ வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லப் பயம்வேண்டாம். துரவினுள் அல்ல, அதிலும் கொடிய தண்டனை வந்தாலும் தேவ சித்தமின்றி எதுவும் நடைபெறாது என்ற நம்பிக்கை இருக்குமானால் எந்த சூழ்நிலையும் நம்மை எதுவும் செய்யமுடியாது. துரவினுள்ளும் எரேமியாவைக் காத்த தேவன் நம்மையும் காப்பாற்றுவார். தைரியமாய் வார்த்தையை அறிவிப்போமா!

? இன்றைய சிந்தனைக்கு:

சுவிசேஷத்திற்குத் தடைகள் பெருகிவருகின்ற இந்நாட்களில் எனது தீர்மானம் என்ன?

? இன்றைய விண்ணப்பம்

எமது நிர்வாக இயக்குநர் குழு, நிர்வாகம் மற்றும் ஊழியர்களாக எமது ஊழியம் எப்படியிருக்க வேண்டுமென்றும், கர்த்தர் நமக்கு ஒப்படைத்துள்ள ஊழிய பணியில் திறமையாகவும் உண்மையாகவும் இருக்க நாம் எவ்வித புதிய முறைகள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் சிந்திக்க எமக்காக ஜெபியுங்கள். கர்த்தர் எம்மை வழிநடத்தவும், அவருடைய வழிநடத்துதலுக்கு நாம் அவதானமாயிருந்து கீழ்ப்படிய வேண்டுமெனவும் எமக்காக ஜெபியுங்கள்.


⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(உங்களது கருத்துக்களை அல்லது ஜெப தேவைகளை எமக்கு எழுதுங்கள். நன்றி.)

?‍♂️ Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Solverwp- WordPress Theme and Plugin