PDF MAY 12
? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 37:11-21

சிறையில் இருப்பினும்….

கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத்  தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். எரேமியா 37:17

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதினாலும், வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடப்பதினாலும் கஷ்டம் துன்பம் இன்றி வாழலாம் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உண்மை ஒன்று உண்டு. இந்த உலகிலே பிரச்சனைகள் நிச்சயம் வரும். ஆனால் என்னதான் நேரிட்டாலும் வெளிச்சத்தின் பிள்ளைகள், வெளிச்சத்தின் பிள்ளைகளே. அவர்கள் ஒருபோதும் தோற்றுப்போக மாட்டார்கள்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தேவனுடைய வார்த்தைகளை மக்களிடம் உரைத்த தீர்க்கதரிசி எரேமியா, தேவனால் அழைக்கப்பட்டவர். இதனால் மக்களும் ராஜாக்களும் அவரைக் கண்டு பயந்தபோதும், அவருடைய வாழ்வு மக்கள் மத்தியிலே தோல்வியின் வாழ்வாகவே தெரிந்தது. அடியும் பரிகாசமும் சிறையும் குழியும் என்று பல வேதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஏன்? தேவ வார்த்தையை உள்ளது உள்ளபடி உரைத்ததினால்தானே. உதவிக்கு வந்த எகிப்தியரைக் கண்டும், கல்தேயர் திரும்பிப் போனதினாலும் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட யூதாவின் ராஜா, எரேமியா உரைத்த தீர்க்கதரிசனத்தினிமித்தம் கலங்கினான். எரேமியா கல்தேயர் பக்கம் சேருவான் என்று பயந்து, எரேமியாவைப் பிடித்து காவற்கிடங்கின் நிலவறைக்குள் போட்டுவிட்டார்கள். அவரின் வாழ்வே இருண்டது போலிருந்தது. ஆனால் நடந்தது என்ன? சிதேக்கியா ராஜா தன் வீட்டிலே இரகசியமாக எரேமியாவைக் கூப்பிட்டு, ஏதாவது நல்ல செய்தி உண்டோ என்று கேட்கிறான். அப்போதும் எரேமியா பயமின்றி உண்மையையே பேசினார்.

கர்த்தருக்குள் அருமையான சகோதர சகோதரியே, நீ தேவனுடைய பிள்ளை என்பது மெய்யானால், ஏதோவொரு காரியத்திற்காக தேவன் உன்னை அழைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இருளின் ராஜ்யத்தினுள் அடிமைகளாயிருந்த நம்மைக் கர்த்தர் விடுவித்தது, பிறரை வெளிச்சத்தின் பிள்ளைகளாக வழிநடத்தவே நம்மை அவர் அழைத்திருக்கிறார். நம்மை விடுவிப்பதற்காக தமது ஜீவனையும் கொடுத்தார். அதற்காக இவ்வுலகில் நாம் எதுவித பாடுகளும் இன்றி பிற மக்களைத் தேவனிடத்திற்கு நடத்திவிடமுடியாது. எவ்வித துன்பம் துயரம் வந்தாலும் தேவன் ஆச்சரியமாக நடத்துவார். நிலவறைக்குள் இருந்தவனிடம் ஏதோ இருக்கிறது என்பதை சிதேக்கியா உணரவில்லையா? அதேவேளை தனக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக எரேமியா, பொய் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையே. அப்படியாக நீயும் இன்று காவற்கிடங்கின் அனுபவத்துக்குள் இருக்கலாம். ஆனால் உன்னிடமும் இரகசியமாக செய்தி அறிய மக்கள் உண்டு. ஆகவே தைரியத்தோடு எழுந்திரு. இந்த நாளில் கர்த்தர் உன் மூலமாக ஏதோவொன்று செய்வார்.

? இன்றைய சிந்தனைக்கு: 

கர்த்தர் எனக்கு உணர்த்தும் செய்தியை, பிறருக்குப் பயமின்றி சொல்ல என்னால் முடிகிறதா? இல்லையானால் அது ஏன்?

? இன்றைய விண்ணப்பம்

தேர்ந்தெடுக்கப்படுகிற ஊழியர்கள் “அலுவலகத்திலிருந்து வேலைக்கு” திரும்புவதால், பாதுகாப்பான வேலைத்தள சூழலை உறுதிப்படுத்த பொருத்தமான கொள்கைகளை விருத்தி செய்திடவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் நிர்வாக குழுவினருக்காக மன்றாடுங்கள்.


⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(உங்களது கருத்துக்களை அல்லது ஜெப தேவைகளை எமக்கு எழுதுங்கள். நன்றி.)

Solverwp- WordPress Theme and Plugin