? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:13-22

இருண்ட மேகம்

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். லூக்கா 11:4

“தினமும் ஜெபிக்கிறேன்; வேதமும் வாசிக்கிறேன், ஆனாலும் நான் அடிக்கடி விழுந்து போகிறேனே; பலவித சோதனைகள் என்னைத் தாக்கும்போது ஓர் இருண்ட மேகத்துக்குள் மறைக்கப்படுகிற உணர்வு ஏற்படுகிறது; நிலையற்றவள்போல ஆடிப்போகிறேனே” என்றாள் ஒரு வாலிபப் பெண். “நீ ஜெபத்தையும் வேதவாசிப்பையும் ஒரு கடமையாகச்செய்கிறாயா” என்று கேட்டபோது, “அப்படி நான் சிந்தித்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் இதைச் செய்கிறேன்” என்றாள் அவள்.

இந்தப் பெண்ணுக்கு மாத்திரமல்ல, நம்மில் எத்தனைபேர் வெளியிலே சொல்ல வெட்கப்பட்டு, காரியங்களை நமக்குள் அடக்கிவைக்கப் பார்க்கிறோம். மனதுக்குள் அடக்கிவைக்குமட்டும் அது இன்னும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜெபிக்கிறோம், வேதம் படிக்கிறோம் என்பதனால் நாம் இந்த உலகத்திற்கு வித்தியாசமானவர்களாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. சோதனை தன் வேலையைச் செய்துகொண்டு தான் இருக்கும். யோபு பக்தனின் வாழ்வைக்குறித்து நாம் அறிந்திருக்கிறோம். உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்றெல்லாம் கர்த்தராலேயே நற்சாட்சி பெற்ற ஒருவர் இந்த யோபு. அவருக்கே சோதனை வரவில்லையா? அந்த இடத்தில் நாம் இருந்தால் ஒருவேளை தேவனையே தூஷித்துவிட்டு ஜீவனை விட்டிருப்போமோ யாரறிவார்!

யாருக்கு சோதனை வரும், யாருக்கு வராது என்று வரையறுக்கக்கூடியவர் யார்?நாம் எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப்போனவர்கள். ஆகவே, இந்த பாவஉலகின் சகலமும் எம்மை ஆட்கொள்ளும் அபாயம் இருக்கத்தான் செய்யும். அதற்காகநாம் சோர்ந்துபோகலாமா? விழித்திருந்து வெற்றியெடுக்கவேண்டாமா? “சோதனை யென்னும் இருண்ட மேகங்களே ஆசீர்வாதமென்னும் மழையைக் கொண்டுவரும்” என்பதை நம்புவோம். ஆம், உலகத்திற்கும்உலகத்திற்குரியவர்களுக்கும் இல்லாதபெரிய பாக்கியம் நமக்குண்டு. அதுதான் கிறிஸ்துவின் இரத்தம். நமது பாவத்துக்காகச்சிந்தப்பட்ட அந்த இரத்தத்தை விசுவாசித்து நமது ஜெபங்களை விழிப்போடு ஏறெடுப்போம். “ஆண்டவரே, நான் பெலவீனமானவள் என்பதை, என்னிலும் பார்க்க அதிகமாகஅறிந்தவர் நீர். நான் சோதனைக்கு உட்படக்கூடிய இடத்திலிருந்து என்னை விலக்கிக்காத்துக்கொள்ளும்” என்று ஜெபித்தாள், மேலே நாம் கண்ட பெண். அதன் பின்னர் காரியங்கள் மாறத் தொடங்கின. ஆம், பாவசோதனையோ, அநீதியின் சோதனையோ, துயர சோதனையோ எதுவானாலும் நாம் ஆண்டவரண்டைக்கு வருவோம். அவர் நிச்சயம் நம்மைக் காத்துக்கொள்வார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

 சோதனைக்கு தோற்றுப்போனதுண்டா, அல்லது சோதனையை ஜெயித்து ஆசீர்வாதத்தை அனுபவித்த அனுபவமுண்டா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin