? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 2:1-10

நமது இருப்பிடம்

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். எபே.2:7

நம்மைக்குறித்து நாம் கொண்டிருக்கும் கணிப்பீடு என்ன? “நான் தேவனுடைய பிள்ளை”, “இரட்சிப்பைப் பெற்றிருக்கிறேன்” என்றெல்லாம் கூறுவதுண்டு. இந்தச் சத்தியத்தைக்குறித்த அறிவை பெற்ற நம்மில், அதன் செல்வாக்கு என்ன? அது நம்மில் ஏற்படுத்திய தாக்கம், அல்லது ஒரு மாற்றம் என்ன? இந்த சத்தியங்கள் நம்மில் செல்வாக்கு ஏற்படுத்தவேண்டுமானால், நம்மை இரட்சித்து, தமது பிள்ளைகள் என்று உரிமை அளித்த தேவன் இன்று நம்மை எங்கே வைத்திருக்கிறார் என்ற விடயத்தை அறிந்து உணர்ந்து, நமது நாடி நரம்புகள் யாவும் அதனால் பெலமடையவேண்டுமே! 

“கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கின்ற நம்மை உயிருடன் எழுப்பி, அவரோடு பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார்” (எபே.2:6 திருத்திய மொழிபெயர்ப்பு). நமது முன்நிலையைக் குறித்து 2:13 வசனங்களில் வாசி;க்கிறோம். இப்படியிருந்த நம்மீது தேவனுடைய இரக்கம் அன்பு தயை கிடைத்தது மகா பெரிய பாக்கியம். பாவத்தில் மரித்திருந்த நம்மை, இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் சகல தோஷத்தையும் நிவர்த்தியாக்கி, கிறிஸ்துவுடனேகூட நம்மையும் தேவன் உயிர்ப்பித்தார். ஆம், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை பரிகரித்து கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் நமக்கும் உயிர்த்தெழுதல் உண்டு. இந்த விசுவாசத்தில் நாம் நிலைநிற்போமானால் அந்த உயிர்த்தெழுத்தலை நாமும் அனுபவிப்போம். இரட்சிப்பு, உடனே நம்மைப் பரலோகம் கொண்டுசெல்லாது. அது வெறும் ஆரம்பமே. தொடர்ந்து பூமியிலேதான் வாழுவோம். ஆனால், உயிர்ப்பு பெற்ற பிள்ளைகளாக, இரட்சிப்பின் நிச்சயத்தினால் இப்போது நாம் உன்னதத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்வை இந்தப் பூவுலகில் வெளிப்படுத்துகிற பிள்ளைகளாக, கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழவும்,

அதற்கான வல்லமையையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் (எபே:1:19). ஆக, இனி நாம் பூமியின் தாழ்விடங்களில் வாழுகின்றவர்களாக, பாவத்தில் உழலுகிறவர்களாக அல்ல; உன்னத வாழ்வை பூமியில் பிரகடனப்படுத்துகின்ற பிள்ளைகளாக நாம் வாழவேண்டும். “உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” என்பது இதுதான் இது சத்தியமானால் நமக்குள் சண்டைகளும் பிரிவினைகளும் எப்படி உண்டாகும்? கோபங்களும் மன்னிக்காத சிந்தையும் எப்படி வெளிப்படும்? கிறிஸ்துவோடு இருக்கிற நாம் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கவேண்டாமா? அந்த உன்னத வாழ்வை இந்த உலகிலேயே வாழுகின்ற பாக்கியத்தை நாம் பெற்றுக்கொள்வதற்காகவே இயேசு உலகில் வந்து பிறந்தார். இதை உணர்ந்து, தவறுகள் நேரிட்டாலும், நான் யார் என்பதை சிந்தித்து, சிலிர்த்துக்கொண்டு எழும்புவேனா?

? இன்றைய சிந்தனைக்கு:  

பாவ மன்னிப்புப் பெற்ற நான் இன்று கிறிஸ்துவோடு உன்னதங்களில் அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற எண்ணம் என்னில் என்ன மாற்றத்தைக் கொண்டுவருகின்றது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin