? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 1:26-38

கன்னிப்பருவமும் கர்த்தருக்கே

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். லூக்கா 1:38

என்னை முழுதாகவும், என் முடிவையும்கூட அறிந்திருக்கிறவர் ஆண்டவர் ஒருவரே! ஏனென்றால், என்னைப் படைத்து உருவாக்கி, தமது பிள்ளை என்ற உரிமையைத் தந்திருக்கிறவர் அவரே! ஆனால் பல சந்தர்ப்பங்களில் நாம் இதைச் சிந்திக்க மறந்துவிடுகிறோம். அதனாலேதான் பல கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள் எழுகின்றன. ஆக, நாம் செய்யவேண்டியது என்ன?

மரியாள் ஒரு கன்னிப்பெண். தேவதூதன் அவளைச் சந்திக்கும்வரைக்கும் அவளது வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. தச்சுத்தொழிலாளி யோசேப்புக்கு இவள் நியமிக்கப்பட்டிருந்தாள். அவளது கனவுகள் எப்படி இருந்திருக்கும்! இந்த நிலையில் இவளைச் சந்தித்த தேவதூதன், “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” என்றும், தாவீதின் சிங்காசனத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார் என்றும், “உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்” என்றும் சொன்னான். இது யூதப் பெண்கள் எதிர்பார்த்திருந்த செய்தி என்பதால் மரியாளுக்கு அது சந்தோஷ செய்திதான். ஆகையால் இந்த செய்தியை அவள் சந்தேகித்திருக்க முடியாது. ஆனால், அவளுக்குத் திருமண நியமம் மாத்திரம்தான் நடந்திருந்தது, அப்படியானால் எப்படி என்பதே அவளுடைய கேள்வி. தேவதூதன் விபரத்தை விளக்கியதும், எதுவித கேள்வியுமின்றி, ஒரு கன்னி கர்ப்பவதியானால் என்னவாகும் என்பதைத் தெரிந்திருந்தும், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை; உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று தன்னை அர்ப்பணம் செய்தாளே, அங்கேதான் மரியாள் உயர்ந்து நிற்கிறாள்.

யூத கன்னிப் பெண்கள் அநேகர் இருந்தும், கர்த்தர், தமது தூதனை ஒரு சாதாரணபெண்ணாகிய மரியாளிடமே அனுப்பினாரென்றால், அவர், அவளை எவ்வளவாக அறிந்திருந்தார் என்பது விளங்குகிறதல்லவா! மீண்டும் ஒரு கன்னி வயிற்றில் அவர் வந்து பிறக்கப்போவதில்லை. ஆனால், அவருடைய இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தம் செய்வதற்கு அவருக்கு ஏராளமானவர்கள் தேவை. நாம் கன்னிகையரோ, பெலவீனரோ, முதுமையிலோ இருந்தாலும்கூட, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை” என்று யார் தங்களை உள்ளபடியே அர்ப்பணிக்கிறார்களோ, தமது பிள்ளைகளைச் சுமக்கின்ற கர்ப்பப் பைகளாக கர்த்தர் அவர்களை, அவர்களின் இருதயத்தையே தேடுகிறார். மரியாள் தன் சரீர கன்னிமையையே ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள், பாக்கியவதி என்று ஆசீர்வதிக்கப்பட்டாள். இன்று உங்கள் கன்னிப்பருவத்தைக் கர்த்தருக்குக் கொடுப்பீர்களா, உங்கள் வாழ்விலும் கர்த்தர் அசாதாரண காரியங்களை நிச்சயம் செய்வார். நித்திய அழிவினின்று மக்களை காப்பாற்றும் சலாக்கியத்தை பெறலாமே!

சிந்தனைக்கு:

இன்று என் நிலை என்ன? என்ன நிலையிலும் கர்த்தர் சித்தம் என்னில் நிறைவேற என் முழுமையையும் அவருக்கு அர்ப்பணிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin