? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப்போஸ்தலர் 10:24-43

மெய்யான சமாதானம்

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, அப்.10:36

“சமாதானம்” என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய காலத்திலே நாம் வாழுகிறோம். இந்த சமாதானத்துக்காக உலக தலைவர்கள் நடத்தாத மாநாடுகளும் இல்லை; கருத்தரங்குகளும் இல்லை. “சமாதான நடை” என்று வீதியில் நடப்பதை கிறிஸ்தவ விசுவாசிகளும் முயற்சிக்காமலும் இல்லை. இருந்தும், மொத்தத்தில் மனுக்குலம் முழுவதுமே சமாதானத்தைத் தேடி நிற்கிறது!

இச்சூழ்நிலையில், சமாதான பிரபுவாகிய கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற இந்த மாதத்தில், உங்களிடம் “நீங்கள் சமாதானமாய் இருக்கிறீர்களா” என்ற கேள்வி கேட்கப்பட்டால் உங்கள் பதில் என்ன? இதைவிட மிக முக்கிய கேள்வி ஒன்று உண்டு, “நான் தேவனுடனான சமாதானத்திலே வாழுகிறேனா?” இதுவே, மிக முக்கியமான கேள்வி. கர்த்தரிடத்தில் வாஞ்சையாக இருக்கின்ற எவரும் இதற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தாமதிக்கவே மாட்டார்கள். ஏனெனில், பூமியிலே சமாதானத்தைத் தருவதற்குப் பிறந்த கிறிஸ்து, சிலுவையிலே தமது இரத்தத்தைச் சிந்தி அதைச் சம்பாதித்தும் கொடுத்துவிட்டார். இது வேதவாக்கியங்களாலும் பரிசுத்த ஆவியானவராலும் உறுதிப்படுத்தப்பட்ட உன்னத சத்தியம். இந்த அத்திபாரத்தில் கட்டப்பட்ட எந்தவொரு வாழ்வும் அவர் தரும் சமாதானத்தை இழந்துவிடமுடியாது. ஆனால் இந்த சுவிசேஷம் அன்றைய இஸ்ரவேலுக்குத்தானே என்று நாம் கூறலாம்; ஆனால் இன்று இது நமக்கும் உரியது. “விசுவாசத்தினாலே அவர்கள் (புறவினத்தார்) இருதயங்களை அவர் சுத்த மாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.” இதைச் சொன்னது யார்? பேதுரு (அப்.15:9). ஆக, நாம் போக்குச்சொல்ல இடமில்லை.

இப்படியிருக்க, ஏராளமானவர்கள், ஏன் கிறிஸ்தவர்களும்கூட சமாதானத்தை இழந்து நிற்பது ஏன்? அவர்கள் தேவன் வகுத்த அத்திபாரத்தில் முற்றிலும் ஆறுதல்படவில்லையா? தங்களில் தாங்களே மனநிம்மதியை இழந்திருப்பது ஏன்? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை மறந்து அடையாளங்களையும் அனுபவங்களையும் தேடுவது ஏன்? தங்கள் தேவைகளைத் தாங்களே தேடுகிறார்களா? மனதில் திருப்தியில்லை; கடவுள் இருக்கிறாரா என்றுகூட சந்தேகப்படுவதேன்? பயத்துடனும் கனத்த இதயத்துட னும் போராடுகிறார்களா? தெய்வீக உத்தரவாதத்தை மறந்து சமய சடங்காசாரங்களை நாடுகிறார்களா? நாம் அப்படியல்ல என்று நாம் கூறினாலும் நம்மை ஆராய்ந்து பார்க்க அழைக்கப்படுகிறோம். மனிதரோ, சந்திக்கப்படும் தேவைகளோ, சமய சடங்குகளோ, ஆவிக்குரிய அனுபவங்கள்கூட மெய்சமாதானத்தைத் தரமுடியாது. கிறிஸ்து ஒருவரே சமாதானக் காரணர். எல்லாமே தலைகீழாகினாலும் அவர் தருகின்ற நிலையான சமாதானம் நமக்கு நிச்சயம் உண்டு

? இன்றைய சிந்தனைக்கு:  

நான் மெய்சமாதானத்துடன் வாழுகிறேனா? சூழ்நிலைகளால் அலசடிப்படுகிறேனா? உண்மைத்துவத்துடன் என்னை ஆராய்ந்து கிறிஸ்துவில் எனது அத்திபாரத்தை நிலைநிறுத்துவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin