? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவா 1:12-13 ரோம 8:14-18

அப்பா பிதாவே!

…நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15

“இவர் எனது பிள்ளை” என்று நமது பெற்றோரும், “இவர்கள்தான் என் அப்பா அம்மா” என்று நாமும் பெருமைப்படத்தக்கதாக, பெற்றோருடனான நமது உறவு எப்படி இருக்கிறது? நமது பெற்றோர் நம்மைக்குறித்துப் பெருமைப்படுமளவுக்கு நாம் வாழுகிறோமா? இன்று, பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்படும் பெற்றோரும் இருக்கிறார்கள்; பெற்றார் வெட்கப்படுமளவுக்கு நடந்துகொள்கின்ற பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து ஆளுகை செய்கின்ற மகத்துவமான தேவன், தம்மை விட்டுத் தொலைந்து பாவத்தில் அமிழ்ந்துபோன மனிதனை மீட்கும்பொருட்டு, தமது ஒரேபேறான குமாரனைப் பலியாக ஈந்து, அவரை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரையும், அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும், “தமது பிள்ளை” என்ற உரிமையை அவனுக்குக் கொடுக்கிறார் என்றால் அவருடைய அன்பை என்ன சொல்ல? பாவத்திற்கு அடிமைகளாக, சாத்தானின் பிடியிலிருந்த நம்மை மீட்டெடுத்த பரமபிதா, நமக்கு புத்திர சுவிகாரத்தை அருளி, தம்மை “அப்பா பிதாவே” என்று கூப்பிடுகின்ற உரிமையைத் தந்துள்ளார். மாத்திரமல்ல, தமது குமாரனுடைய ஆவியை நமக்குள் தந்திருக்கிறார் (கலா.4:6). மேலும், நாம் தேவனுடைய பிள்ளைகள்தான் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே சாட்சிபகருகிறார். மேலும், நாம் தேவனுக்குப் பிள்ளைகளென்றால் தேவனுடைய சுதந்திரரும், கிறிஸ்துவுக்கு உடன்சுதந்திரருமாகிறோம். இந்தப் பெரிய சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள நாம் பெரிதாக எதுவும் செய்யவேண்டியதில்லை. “என் பாவங்களை என் இயேசு சுமந்து என்னை மீட்டுக்கொண்டார்” என்று விசுவாசித்தாலே போதும்;  இப்படியிருக்க, அன்பைத் தேடி, உரிமையைத் தேடி இந்த உலகுக்குப் பின்னால்ஏன் ஓடுகிறோம்?

மகா மேன்மையுள்ள தேவனை “அப்பா பிதாவே” என்று உரிமையோடு கூப்பிட்டு உறவாடுகின்ற கிருபை, கிறிஸ்து இயேசுவுக்குள் மாத்திரமே கிடைக்கிறது. ஏனெனில் அவர் ஒருவரே மனிதனின் பாவத்தைச் சுமந்து தீர்த்தவர். “தேவனுடைய பிள்ளை” என்ற இந்த உரிமையைப் பெற்றுத்தரவே இயேசு உலகில் வந்து பிறந்தார் என்பதை சிந்திக்கவேண்டும். நமது கடந்தகாலம் எவ்வளவு சீர்கெட்டதாயிருந்தாலும், நாம் மனந்திரும்பி தேவபாதம் சேரும்போது, அவர் நம்மைத் தூய்மைப்படுத்தி புதிதாக்கிதமது பிள்ளையாக மார்போடு அணைத்துக்கொள்கிறார். இது வெறும் கொள்கையோ போதனையோ அல்ல; இதுவே சத்தியம். இப்படியிருக்க, நம்மை உள்ள உள்ளபடியே பிள்ளையாக ஏற்றுக்கொண்ட நமது அப்பாவின் நாமம் அபகீர்த்தியடையும்படிக்கு நாம் நடக்கவேண்டாமே?

? இன்றைய சிந்தனைக்கு: 

  என்னையும் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, பிள்ளை என்ற அந்த உரிமையைத் தந்த பரமபிதாவின் நாமம் என்னிடத்திலே பெருமையடையும்படி நான் வாழுவேனா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin