? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : வெளி 4:1-11

நிலையான ராஜ்யம்

கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்… வெளி.4:11

குழப்பமும் கூக்குரலும் நிறைந்திருந்த இந்த வருடம், எப்படியோ தனது இறுதி நாட்களுக்குள் நம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. உறுதியற்ற வாக்குறுதிகள், நம்பிக்கை சிதையும் சம்பவங்கள், சூழ்நிலை தந்த புதிய அனுபவங்கள், அவலமான எத்தனையோ மரணங்கள்; இவைதான் இவ்வருடத்தின் அனுபவங்கள். வீதிக்கு வந்த மக்கள் மத்தியில் சண்டைகள், கோபங்கள், கடின வார்த்தைகள், மனிதனை மனிதன் மதிக்காத சம்பவங்கள் என மனிதனது குணாதிசயமே மாறிவிட்டது. மொத்தத்தில் உலகின் பல நிலைகளிலும் நம்பிக்கை இழந்து நிற்கிறோம் எனலாம்!

ஆனால் இந்த சூழ்நிலைகள் புதிதல்ல. உலக வரலாற்றினைத் திருப்பிப் பார்த்தால் அன்றும் இன்றும் ஒன்றுதான் நடக்கிறது; ஆனால் வித்தியாசமான விதங்களில் நடக்கிறது. என்றாலும், சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும்போதுதான் நமக்குள் குழப்பம் ஏற்படுகிறது. முதலாம் நூற்றாண்டிலும் பல இன்னல்களை மக்கள் சந்தித்தார்கள். அதிலும் கிறிஸ்துவின் பிள்ளைகள் அடைந்த துயரங்களுக்கு அளவில்லை. அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள்; சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்; உயிரோடே எரிக்கப்பட்டார்கள்; வீடுகளைவிட்டு குகைகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள்; தமது நம்பிக்கை இழந்து நின்றார்கள். கி.பி.90-95 காலப்பகுதியில் ரோம சக்கரவர்த்தியி னால் இவர்கள் மிகுந்த உபத்திரவப்பட்டார்கள். முதிர்வயது வரை வாழ்ந்திருந்த சீஷனாகிய யோவான் பத்முதீவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில்தான் விசுவாசத்தினிமித்தம் உபத்திரவப்பட்ட தமது மக்களுக்குக் கர்த்தர் கொடுத்த  ஒரு உத்தரவாதம் நிறைந்த தரிசனத்தை யோவான் பெற்றுக்கொண்டு, இந்த வெளிப்படுத்தலை எழுதியுள்ளார். உலக அரசாங்கம் கொடூரமாக, உறுதியற்றதாக இருந்தாலும், ஒரு உறுதியான ராஜ்யம் உண்டு என்ற நம்பிக்கையைக் கர்த்தர் யோவான் மூலம் கொடுத்தார். ஆகவே அவர்கள் உபவத்திரத்திலும் கர்த்தருக்குள் திடமாக இருந்து, மரணத்தைச் சந்திக்க நேரிட்டபோதும் பின்வாங்கிப் போய்விடவில்லை.

இன்று, கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் நமக்குப் பாடுகள் இல்லை; என்றாலும் தேசத்தின் விழுந்துபோன நிலைமையால் நம்பிக்கை இழந்துவிடத்தக்க சோதனைக் குள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில், ஒரே கேள்வி! சகல கனமும் மகிமையும் வல்லமையும் கொண்டுள்ள கிறிஸ்துவின் ராஜரீகத்தை அறிந்து உணர்ந்து அனுபவிக்கின்ற நாமும் உலகத்தாருடன் சேர்ந்து, நம்பிக்கை இழந்து நிற்கப்போகி றோமா? அல்லது, நமது தலைகளை உயர்த்தி அழியாத நிலையான ராஜ்யத்தை, நித்தியராகிய ராஜாவை நோக்கி, இந்த உலகத்து பாடுகளை ஜெயித்து, நம்மைச் சூழவுள்ள மக்களைத் திடப்படுத்தப்போகிறோமா? என்றும் நிலையான ஒரு ராஜ்யம் நமக்கு உண்டு என்ற நம்பிக்கையில் தலைநிமிர்ந்து முன்செல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

“உம்முடைய ராஜ்யம் வருவதாக” இந்த ஜெபத்தின் அர்த்தம் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin