? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 4:1-15

?♀️  ஆவியானவராலே வனாந்தரத்துக்கு

…ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். லூக்கா 4:1-2

நம் பாவங்களை நமக்கு உணர்த்தவும், இயேசுவே கர்த்தர் என்று வெளிப்படுத்தவும், சத்திய பாதையில் நம்மை வழிநடத்தவும், தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் நமக்கு அருளப்பட்டுள்ளார். ஆனால் ஆண்டவருக்கு நடந்தது என்ன? முப்பது ஆண்டுகள் அமைதியாக ஒதுங்கியிருந்த இயேசுவை அவரது பெற்றோரும் அறிந்துகொள்ளவில்லை; ஜனங்களும் அவரை யார் என்று கண்டுகொள்ளவில்லை. ஆனால் வேளை வந்தபோதோ, இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்குமுன்னர் ஞானஸ்நானம் பெற்று ஜெபிக்கையிலே பரிசுத்தாவியானவர் அவர்மீது இறங்கினார். பரிசுத்தாவியினாலே மரியாளின் வயிற்றில் உதித்தவரின்மீது, அதே பரிசுத்தாவியானவர் இங்கே வந்திறங்கினார். உடனே இயேசுவுக்கு, ஆறுதலும், தேறுதலும், வெற்றியுள்ள ஊழியமும், செழிப்பான வாழ்க்கையும் மேன்மையும் கிடைத்ததா? இல்லை.

ஆனால், இன்று பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தினால் நிறைக்கப்பட்டதும், அது கர்த்தருடைய சுத்த ஈவு என்பதை மறந்து, பெருமைக்குள்ளாகி சுயமேன்மையை நாடி நிற்கிறவர்கள் எத்தனைபேர்! பரிசுத்தாவியினாலே நிரப்பப்பட்ட இயேசுவுக்கு நடந்தது என்ன? எந்த ஆவியானவர் அவர்மேல் இறங்கினாரோ, அவரே இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டுசென்றார். பிசாசினாலே சோதிக்கப்படுவதற்கென்றே கொண்டுசெல்லப்பட்டார். ஆரம்பமே அவதிபோல தெரிகிறதல்லவா. ஆம், கிறிஸ்தவ ஜீவியம் பாடுகள் நிறைந்ததுதான்; நம்மை விசுவாசத்திலே நிலைநிறுத்தும்படிக்கு தேவனே நமக்குச் சோதனைகளை அனுமதிக்கிறார். கிறிஸ்துவுக்கென்று நம்மை ஒப்புக்கொடுத்து, பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய ஆரம்பித்ததும், பிசாசானவன் மிகுந்த வீரீயத்துடன் நம்மை விழுத்திப்போட நம்மைத் தொடருவான். தொடர்ந்தாலும் தோல்வி அவனுக்குத்தான். அவனை வெற்றிகண்ட ஆண்டவர் நம்முடன் இருக்க நமக்கு என்ன பயம்?

ஒரு சாதாரண கிறிஸ்தவனாக இருந்திருந்தால் கஷ்டமின்றி ஜீவித்திருக்கலாமே; இப்போது ஆண்டவருக்கு என்னை ஒப்புக்கொடுத்ததால்தானே இத்தனை துன்பம் என்று சிந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும். நாம் சோதிக்கப்படும்படிக்கு தேவனால் அனுமதிக்கப்பட்டாலும் நம்மைவிட்டு ஆண்டவர் போய்விடமாட்டார். லூக்கா 4:14 ஐ பாருங்கள். இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டுசென்ற அதே ஆவியானவர்தாமே இயேசுவை ஊழியத்திற்காக அழைத்துச் செல்கிறார். அந்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்தபோது இயேசுவின் கீர்த்தி எங்கும் பரவியது. ஆகவே சோதனைகள் மத்தியிலே நீயும் அமர்ந்திரு. வேளைவரும்போது ஆவியானவர் தாமே உன்னையும் தமது நாமத்திற்காக நிச்சயம் உயர்த்துவார்.

? இன்றைய சிந்தனை :

பரிசுத்தாவியானவரின் பலத்த கரங்களுக்குள் அமர்ந்திருந்து, அடங்கியிருப்பது என்பது என்ன? என்னதான் நேர்ந்தாலும், எதுதான் நடந்தாலும் நம்மால் அது முடியுமா?

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin