? சத்தியவசனம் – இலங்கை. ??


? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:41-45

? ஒரு நிச்சயமான எதிர்பார்ப்பு

பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனம்பண்ணும் வெகு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். 1இராஜாக்கள் 18:41

பல வாரங்களாக மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டதைக் கண்ட விவசாயிகள்,  தமது சிறிய கிராமப்புற ஆலயத்தில் ஒருநாள் அனைவரும் திரண்டுவந்து ஒருமனதாக மழைக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர். அந்தக் குறிப்பிட்ட ஜெப நாளில் சபைப் போதகர் ஆராதனை நடத்த மேடைக்கு ஏறிவந்து சபையாரைச் சுற்றிலும் கவனித்த பின்பு, சபையாரை நோக்கி, ‘நான் இப்பொழுது ஆசீர்வாதம் கூறப்போகிறேன். முடிந்ததும் அனைவரும் எழுந்து தங்கள் வீடுகளுக்குப் போகலாம்” என்றார். ஆசீர்வாதத்தைக் கூறி முடித்தார். சபையார் கலைந்து சென்றனர். சபைத் தலைவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. போதகரை சூழ்ந்துகொண்டு, கோபத்துடன், ‘ஐயா, மழைக்காக ஜெபிக்கத்தானே இந்த ஆராதனை கூட்டப்பட்டது. நீங்கள் ஜெபம் ஏறெடுக்காமல் மக்களைப் போகச் சொல்லி விட்டீர்களே, ஏன்?” என கேட்டனர். அதற்கு அவர், ‘மழைக்காக ஜெபித்தால் நிச்சயம் மழை வரும். மழை வந்தால் வீடு போகக் குடைவேண்டும். இந்த எண்ணம் ஒருவருக்கும் தோன்றவில்லையே, அதனால் தான் ஒருவரும் குடை கொண்டுவரவில்லை. இதைக் கவனித்துத்தான் ஜெபிக்காது மக்களை அனுப்பிவிட்டேன், மழையில் நனையாது வீடுபோய்ச் சேரட்டும்” என்றார். 

எலியா ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தது மட்டுமல்ல. ஆண்டவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தான். மேகங்கள் கூடிவருமுன்னும், இடி முழக்கம் முழங்கும் முன்னும், எலியா பெருமழை பெய்யப்போவதை அறிந்தான். அவன் தேவனுடைய சித்தத்துக்கு ஏற்றபடி விண்ணப்பம் செய்தான். தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்த மழையை, உலகின் எந்த சக்தியும் தலையிடுவதற்கு முன்னர், தேவன் அருளிச் செய்வார்  என்று அறிந்தான். தேவன் மழையை அருளிச் செய்வார் என்ற நம்பிக்கையில்தான் எலியா ஆகாப் ராஜாவிடம், ‘மழைவரும் முன் வீடு போய்ச்சேரும்” என்று கட்டளையிட்டான். அப்படியே பெருமழை உண்டாயிற்று.

எவ்வளவேனும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே ஜெபிக்க வேண்டும் எனவும் எதற்கும் சந்தேகப்படாமல் ஜெபிக்கவேண்டும் எனவும் வேதாகமம் கூறுகிறது (யாக். 1:6) நாம் தேவனுடைய சித்தத்தின்படி விசுவாசத்தோடு ஜெபம்செய்தால், பதில் வரும் என்று எந்த ஆதாரத்தையும் காட்டி தேவன் நமக்கு உணர்த்த வேண்டியதில்லை. நேரம் வரும்போது தேவன் நிச்சயம் நிறைவேற்றுவார். நம்முடைய நிச்சயமற்ற பயம் நிறைந்த மனநிலையைக் கண்டு தேவன் ஒருபோதும் பதில் தருவதில்லை. நீங்கள் ஜெபம் பண்ணும்போது தேவனைப் பாருங்கள். நமது ஜெபத்துக்குப் பதில் நமது சூழ்நிலைகளிலிருந்து அல்ல; பரலோக பிதாவே அதை அருளிச்செய்கிறார்.

? இன்றைய சிந்தனைக்கு:

விசுவாசத்தின்படி ஜெபியுங்கள்; சூழ்நிலைகளின்படி ஜெபிக்கவேண்டாம்.


? இன்றைய விண்ணப்பம்


இணையத்தளத்திற்கூடாக தொடர்ச்சியாக வாராந்தம் நடைபெறுகின்ற விசுவாச ஜெப பங்காளர்களின் ஒன்றுகூடலுக்காக ஜெபியுங்கள். ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் அநேகர் இணைந்துகொள்ளவும் சீஷத்துவத்தில் தைரியப்படவும் ஜெபிப்பதோடு, சிங்கள மொழியிலும் இது தொடங்கப்பட மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin