? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 16:1-16

கடினமான பாதை

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். ஆதியாகமம் 16:9

இலகுவான பாதையிலே நாம் கண்ணை மூடிக்கொண்டும் பயமில்லாமலும் நடந்து விடலாம். ஆனால் கடினமான பாதையில் செல்லும்போது, ஒவ்வொரு நிமிடமும் விழிப் போடும், கவனத்தோடும் செல்லவேண்டியதாக இருக்கும். காரணம், நாம் கவனமாக நடக்காவிட்டால் ஆபத்துக்களையும் எதிர்நோக்க வேண்டி நேரிடலாம்.அதுபோலவே தான் வாழ்க்கைப் பாதையிலும் சிலவேளைகளில் கஷ்டங்கள் வரும்போது அதைக் கடந்துசெல்ல பெலனற்றவர்களாக அதை விட்டு ஓடிவிடலாமோ என்றும் சிந்திப்பதுண்டு.

இங்கே ஆகாரின் நிலையும் அதுவாகவேதான் இருந்தது. சாராய் தனக்குப் பிள்ளை யில்லாதிருந்தபோது, தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை, ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுக்கிறாள். அவள் கர்ப்பந்தரித்தபோது, தனது நாச்சியாராகிய சாராயை அற்பமாக எண்ணத்தொடங்கினாள். அதனால் குழம்பிப்போன சாராய் அவளை கடினமாக நடத்தத் தொடங்கினாள். இதைப் பொறுக்கமாட்டாத ஆகார், சாராயை விட்டு ஓடிப்போவதைக் காண்கிறோம். ஓடிப்போன ஆகாரைக் கர்த்தருடைய தூதனானவர் வனாந்தரத்திலே கண்டு, நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றபோது, அவள் நான் என் நாச்சியாரை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள். அதற்குக் கர்த்தருடைய தூதனானவர் சொன்ன வார்த்தை என்னவென்றால், “நீ திரும்பிப் போய், உன் நாச்சியாரின் கையின் கீழ் அடங்கியிரு” என்பதே. அந்த நேரத்தில், ஆகாருக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளையானது, அதிகாரத்தின் கீழ் அடங்கியிரு என்பதாகவே இருந்தது. ஆகாருக்கு அது கடினமான பாதையாக இருந்தாலும், அதையே ஆகார் செய்யவேண்டுமென்று தேவன் எதிர்பார்த்தார். மேலும், அவளின் சந்ததியைப் பெருகப்பண்ணுவதாகவும், அது பெருகி எண்ணிமுடியாததாய் இருக்கும் என்றும் வாக்குப்பண்ணிய தேவன், அவளை ஓடித் தப்பும்படி சொல்லாமல், வந்தவழியே திரும்பிப் போய் சாராய்க்கு அடங்கி இருக்கும்படிக்கே சொன்னார். தேவனின் அந்தக் கட்டளை அந்நேரத்தில் ஆகாருக்கு எப்படியாக இருந்திருக்கும் என்பதைச் சிந்தனைப் பண்ணிப் பாருங்கள். ஆனாலும் அவள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தாள்.

கர்த்தர் அவளுடைய வாழ்வைத் தலைகீழாக மாற்றிப் போடவுமில்லை, பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கவுமில்லை. அவர் சொன்னது, நீ எங்கேயிருந்து வந்தாயோ, அங்கேயே திரும்பிப் போய், அதே சூழ்நிலையிலே அடங்கியிரு என்பதே. எமது வாழ்க்கையிலும் இதேபோல கடினமான பாதை வரும்போது, அதிலிருந்து தப்பியோட நாம் எண்ணுகி றோமா? அல்லது தேவனின் பெலத்தோடு அதைக் கடந்திட பிரயத்தனம் செய்கிறோமா? உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். சங்கீதம் 34:5

? இன்றைய சிந்தனைக்கு:

வாழ்க்கையின் பாடுகளின் மத்தியில், அதை எதிர்கொள்ள நினைக்கிறோமா? அல்லது ஓடிவிட தருணம் தேடுகிறோமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin