? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :சங்கீதம் 34:1-21

ருசித்துப்பார்த்து நம்பு

கர்த்த நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  சங்கீதம் 34:8

பிறந்தநாள் கொண்டாட்டத்திலே சாப்பிட்ட கேக்கைப்பற்றி அனைவரும் புகழ்ந்து பெருமிதத்துடன் பேசிக்கொண்டனர். ருசியாக இருந்தது, இவர்தான் செய்திருப்பார் போலும், இதைப்போட்டுத்தான் செய்திருக்கவேண்டும், இப்படியாக எத்தனையோ பேச்சுக்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. எதற்கும் பதில் பேசாமல் நான் மௌனமாய் இருக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என்ன காரணம் என்பது புரியவில்லையா. நான் பிந்திப்போனதால் அந்த கேக்கை இழந்துவிட்டேன். அதனால் அதன் ருசியை என்னால் உணரமுடியவில்லை. அனைவரும் சொல்லுவது கேட்கிறது, ஆனால் என்னால் அந்த ருசியை உணர்ந்து விபரிக்க முடியவில்லை.

இதுபோலவே ஆண்டவர் நல்லவர், வல்லவர், ஆலோசனைக் கர்த்தர், வழிநடத்தவல்லவர் என்றெல்லாம் எத்தனையோ கதைகளைக் கேட்டாலும், அவற்றையெல்லாம் நாம் உணர்ந்திருக்காவிட்டால் ஆண்டவர் நல்லவர் என்பதை ருசித்திட முடியாது. அப்படியானால் எப்படி நாம் ஆண்டவரை ருசித்திட முடியும்? அவரோடு எவ்வளவாய் நாம் உறவாடுகிறோமோ, அவ்வளவாய் அவரை, அவரது அன்பை, மீட்பை, இரக்கத்தை, ஆண்டவர் நல்லவர் என்பதை முழுமையாகவே ருசிபார்த்திட முடியும்.

அவருடைய வார்த்தைகளைத் தியானித்து, அவரோடு ஜெபத்தில் உறவாடும்போது, அவர் நல்லவர் என்பதை ருசித்திட முடியும். மற்றவர்கள் தமது அனுபவத்தில் தாம் ருசித்ததை எம்;மோடு பகிர்ந்துகொள்வார்கள். அதை நாம் கேட்கலாம். ஆனால் அதை நாம் எமது வாழ்வில் உணர்ந்திட வேண்டுமானால், அதற்காக நேரத்தை ஒதுக்கி ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்திருந்து அவரோடு உறவாடவேண்டும். எப்படியாக ஒரு கேக்கை ருசிபார்க்காமல் அதன் ருசியை உணர்ந்திட முடியவில்லையோ, அதுபோலவே நாம் நேரம் ஒதுக்கி தேவனோடு உறவாடாவிட்டால், அவரது வழிநடத்து தலையும் அவரது கிருபைகளையும் எம்மால் உணர்ந்திட முடியாது.

மார்த்தாள், மரியாளின் கதை உங்களுக்குத் தெரியும். அன்று மார்த்தாளும் இயேசுவுக் காகத்தான் அனைத்தையும் செய்தாள். அவரை உபசரிக்க, அவருக்கு ருசியான ஆகாரத்தைத் தயார்பண்ண வேகமாக செயற்பட்டாள்.  ஆனால் இயேசு மார்த்தாளைப் பார்த்துச் சொன்னது என்ன? “தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” என்பதே. தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருப்பது, அவரது வார்த்தைகளைத் தியானிப்பது அதுவே அந்த நல்லபங்கு. அதை நாம் நமது வாழ்வின் ஓட்டத்தில் தவறவிடக்கூடாது. அவர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க பின்நிற்கவேண்டாம். அவர் அதிகாலையிலே இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போய். அங்கே ஜெபம்பண்ணினார். மாற்கு 1:35

?இன்றைய சிந்தனைக்கு: 

  கர்த்தரின் வழிநடத்துதலையும், கிருபைகளையும் எனது வாழ்வில் ருசித்துப் பார்த்திருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin