? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 3:1-10

நம்பிக்கையும், சுத்தமும்

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும். அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 1யோவான் 3:3

இன்று உலகத்திலே, தங்கள் இஷ்டம்போல வாழுகிறவர்களும், தங்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ அதைச் செய்கிறவர்களும், உலக இன்பங்களையும், சௌகரியங்களையும் ஒன்றுவிடாமல் அனுபவிப்பவர்களுமாய் இருப்போரும் அநேகர். சிலரோ, ஞாயிறு ஆராதனை தவறாமல் கலந்துகொள்;வர், தசமபாகங்களை தவறாது கொடுப்பர், ஆலயத் தேவைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் சந்திப்பர், எங்கு பணத்தேவை உள்ளதோ அங்கெல்லாம் பணஉதவி செய்ய முன்நிற்பர். இவர்களும் நாம் தேவனை நம்புகிறோம் என்றே சொல்லுவார்கள்.

யோவான் எழுதும்போது, தேவனுக்குப் பிரியமாய் இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட எதையுமே எழுதவில்லை. அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதுகிற விடயம் ஒன்று மட்டுமே. அதாவது அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, நாமும் எம்மை சுத்திகரித்துக்கொள்ளுதலையே குறிப்பிட்டு எழுதுகிறார். பாவத்துக்கும் தேவனுக்கும் இடையில் பெரியதொரு இடைவெளியுண்டு. தேவன் பாவத்தை வெறுக்கிறார். பாவம் செய்கிறவன் பிசாசுக்குச் சொந்தமானவன். அவரில் நிலைத்திருக்கிறவன் பாவம் செய்யமாட்டான். பாவம் செய்கிறவன் அவரை அறிந்ததில்லை.

நாம் கர்த்தருக்காக எத்தனையோ காரியங்களைச் செய்யலாம். ஆனால் எம்மை அவருக்கு முன்பாக சுத்தமாய் காத்துக்கொள்ளுவதே அவர் எமக்காக காட்டிய அன்புக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். இன்று நம்மில் எத்தனைபேர் இதனைச் செய்ய ஆயத்தமாய் இருக்கிறோம். அவரில் நாம் நம்பிக்கையாய் இருந்தால் மாத்திரம் போதாது, அவருக்கு முன்பாக எம்மைச் சுத்தமாய்க் காத்துக்கொள்வதும் முக்கியமானதாகும். எம்மை அழைத்த தேவன் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நாமும் எமது நடக்கை எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் வாழவேண்டும்.

தேவன் பாவத்தை வெறுக்கிறார், ஆனால் பாவியையோ நேசிக்கிறார். பாவிகளை மீட்கவே அவர் கல்வாரிச் சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்தார். எனவே அவரது மீட்பின் அந்த மகத்துவத்தை உணர்ந்தவர்களாய், உண்மையிலேயே எம் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்கும்போது, அவர் எம்மை மன்னித்து தம்முடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்வார். அதன் பின்னர் நாம் அவரை நம்பி வாழலாம். அந்த நம்பிக்கையிலும் ஒரு அர்த்தம் உண்டு. பிரியமானவர்களே, இன்றே மனந்திரும்புவோம். எம்மை அவரிடம் தந்து முழுமையாக அவரை நம்புவோம். உங்கள் இருதயத்தில் பரிசுத்;;தம்பண்ணுங்கள். 1பேது 3:15

? இன்றைய சிந்தனைக்கு: 

  நீ தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சுத்தமானதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin