? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 29:10-14

முழு இருயத்தோடு தேடினால்…

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்!  எரேமியா 29:13

நம்பமுடியாத காரியங்களைக் கூறி அவற்றைத் தேடி நாடவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவரது வார்த்தை சத்தியம். அந்த வார்த்தையின்படி உண்மையாய் நடப்போமானால், அதன் மேன்மையான முடிவை நிச்சயம் கண்டடைவோம். நமது எதிர்காலத்தையும் முடிவையும்கூட அறிந்தவர் நம் தேவன். அதனால் அவரே நமக்குத் திட்டங்களை வகுத்து அந்த வழியிலே நம்மை நடத்திச் செல்லுகிறார். அந்தப் பாதையில் கஷ்டம் துன்பம் இல்லை என்று சொல்லமுடியாது; ஆனால் அழிவு கிடையாது. எது வந்தாலும் முடிவு மகா மேன்மையுள்ளதாயிருக்கும். ஆனால் அதைக் கண்டடைய முழு இருதயத்துடன் கர்த்தரை நாம்தான் தேடவேண்டும்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியாததாலேயே, கர்த்தருடைய ஜனம் பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட தேவன்தாமே அனுமதித்திருந்தார். அப்படி சிறைப்பிடிக்கப்பட்டும் தேவன் அவர்களை மறக்கவில்லை. அவர்களுக்கு ஒரு புதிய ஆரம்பத்தை, புதிய நோக்குடன் வாழும் ஒரு புதிய வாழ்வைத் தர ஆயத்தமாயிருந்தார். ஆனால் அவர்கள் விண்ணப்பம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தாலே, தேவன் அவர்களுக்கு செவிக்கொடுப்பார். நமது கஷ்ட துன்பவேளையில் தேவன் நம்மைக் கைவிட்டுவிட்டாரோ என்று நாம் எண்ண லாம். ஆனால் யூதாவின் பேரில் அவர் கொண்டிருந்த எண்ணத்தையே அவர் நம்மிலும் கொண்டிருக்கிறார். ஆகவே நாம்தான் அவரைத் தேடவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள் முழு நம்பிக்கையுள்ள எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்வதே அவருடைய அநாதி சித்தம். வாழ்வின் கஷ்ட நிலைகளில் மாத்திரமல்ல, அகதிகளாக்கப்பட்ட அல்லதுசிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலும் தேவபிள்ளைகள் மனம்நொந்து போகக்கூடாது. ஏனெனில் தேவன் நம்மோடே இருக்கிறார். எந்தவேளையும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற சுதந்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய கிருபை நமக்கு எப்போதும் உண்டு என்ற நிச்சயத்தைத் தந்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும், நமது நாட்டிலோ

அல்லது வீட்டிலோ எது நேரிட்டாலும், இன்னும் வியாதியோ, மரண ஆபத்தோ, எதுவானாலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் நாம் அவரைத் தேடவேண்டும். 

கர்த்தரைத் தேடுகிறவன் அவரைக் கண்டடைவான் என்பது வாக்குறுதி. முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடினால் வார்த்தைக்கூடாகவோ சிருஷ்டிப்புகளுக்கூடாகவோ அல்லது எந்தவிதத்திலோ தாம் நம்மோடு இருக்கும் நிச்சயத்தை தேவன் நமக்கு நிச்சயம் தருவார் என்பதே நாம் அவரைப் பற்றிக்கொண்டிருக்கிற நிச்சயம். நாம் தனிப்பட்டவர்களாக மாத்திரமல்ல, தேசமும் தேவனைத் தேடினால் அவர் நிச்சயம் தேசத்தையும் இரட்சிப்பார். இந்த செய்தியைத் தேசத்துக்கு எடுத்துச் சொல்லுகிறவர் யார்? நாம்தானே?

? இன்றைய சிந்தனைக்கு:

   என் இக்கட்டுகளில் நான் கர்த்தரைத் தேடிக் கண்டடைந்த கிருபையை என்னைச் சுற்றிலும் வாழுகிற மக்களுக்கு எடுத்துரைக்க எனக்குள்ள தயக்கம் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin