? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 4:14-24

கிறிஸ்துவுக்குள் வளருவோம்!

…தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி.. எபேசியர் 4:15

தேவசாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்திற்குள் விழுந்தது எப்படி? தேவன் தொடவேண்டாம் என்று கட்டளையிட்ட ஒன்றை அவன் தொட்டது எப்படி? அவனுக்குள் இருந்த சுதந்திரத்தை அவன் தவறாகப் பயன்படுத்தியது ஏன்? இன்று நமக்குள் தெரிந்தெடுக்கும் திறமையுண்டு. ஆனால் அதை சாத்தானின் வஞ்சகத்திற்கு விற்றுப்போட்டதாலே மனிதன் தேவனைவிட்டுப் பிரிந்துபோக நேரிட்டது. அன்று ஏதேனிலே வந்த சோதனை வடிவமாகிய கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்ற அதே வடிவிலேதான் சோதனைக்காரன் இன்றும் நம்மைச் சோதிக்கிறான்.

ஆனால் நாம் அன்றைய ஆதாம் ஏவாளைப்போல இன்னும் விழுந்துகொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லையே! பாவத்தைப் பரிகரிக்கும் பலியாக கிறிஸ்து உலகிற்கு வந்து தம்மையே கொடுத்ததாலே, இன்று நாம் பாவத்துக்குள் விழவோ, விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கவோ, பாவத்திற்கு நம்மை முற்றிலும் விற்றுப்போடவோ தேவையில்லை. நாம் நாளாந்தம் கிறிஸ்துவுக்குள் வளருகிறவர்களாக இருக்கிறோம். ஆகவே விழுந்தாலும் விழுந்த இடத்தில் இராமல் நாம் எழுந்து நடக்கலாமே! ஆனால், அநீதியும் ஒழுக்கமின்மையும் வன்செயல்களும் நிறைந்திருக்கும் இருளான காலத்தில் வாழுகின்ற நமக்கு, கிறிஸ்துவுக்குள்ளாக வளருவது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம். எல்லாவிதத்திலும் சோதனைகள் நம்மை தாக்கும்போது, தேவனுக்குச் சாட்சியாக வாழுவது எப்படி முடியும் என்பது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். ஆனால் முடியும்.

நம்மால் முடியாததை நம்மிடம் எதிர்பார்க்கிறவர் அல்லவே நம் தேவன். அப்படியானால் நாம் விழுந்துபோவதற்குரிய முக்கிய காரணம் என்ன என்பதை நாம் கண்டறியவேண்டியது கட்டாயம். அதற்கு பலவித காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது என்னவெனில் நம்மைச் சூழ்ந்திருக்கின்ற மக்களைப்போல நாமும் வாழ முற்படுவதுதான். சிந்திக்காமலேயே உலகத்தோடு ஓட நாம் முயற்சிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மனுஷஞானம் சொல்லும் தந்திரமான போதனைகளினால் அலைகிறவர்களாய் சத்தியத்தை வெகு இலகுவில் மறந்துபோகிறோம்.

அத்துடன் இன்று சத்தியத்தையே புரட்டிப்போடுகின்ற கவர்ச்சியான செய்திகள் நம்மை அதிகம் ஈர்க்கின்றன என்பதையும் மறுக்கமுடியாது. அப்படியானால் எப்படி நாம் கிறிஸ்துவுக்குள் வளரமுடியும்? தேவனை மட்டும் சார்ந்து நிற்போமானால், அவருடைய வார்த்தையை மாத்திரம் நமது வாழ்வின் வழியாய் கொண்டிருப்போமா னால் பின்னர் ஏன் பயம்! நாம் கிறிஸ்துவுக்குள் வளரவேண்டும்; கிறிஸ்துவின் குணாதிசயத்தில் வளரவேண்டும். அது ஒன்றே நமது வாழ்வின் நோக்கமாகட்டும்.

? இன்றைய சிந்தனைக்கு:

   கிறிஸ்துவின் குணாதிசயத்தில் நாம் வளரும்போது, அது நமது வாழ்வை வெளிச்சமாக்குவதுடன், பிறருக்குள்ளும் அந்த வெளிச்சம் பிரகாசிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin