? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 11:19-23

தீமைகள் சூழ்ந்தாலும்…

…உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்… எரேமியா 11:21

பாபிலோனிய அரசு, எகிப்தையும் அசீரிய நாட்டையும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டிருந்த நாட்களில், எரேமியாவின் சொந்தப் பட்டணமான ஆன தோத்துக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை அவருக்கு வருகின்றது (எரே.11:21) அதனை அவரால் அறிவிக்காமல்விட முடியவில்லை. ஏனென்றால் அது தேவனின் வார்த்தை. அதை அவர் சுயமாய் சொல்லவில்லை. எதையும் எதிர்பார்த்துச் சொல்லவுமில்லை. தன் ஜீவனுக்கு ஆபத்து என உணர்ந்தும், மக்களுடைய நன்மைக்காக அவர் தமது வாயைத் திறந்தார். ஆனால் அவரது அயலகத்தார் அவரை வெறுத்தார்கள். தனது சொந்த பட்டணத்து மக்களே தன்னை வெறுத்தபோதும், எரேமியா அவர்களுக்காகவே, அவர்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தையைச் சொன்னாரென்றால், அவருக்கு அவர்கள் பேரில் இருந்த கரிசனையை, அன்பை நாம் இன்று உணரவேண்டும்.

எரேமியா தனது மக்களுக்காகப் புலம்பல் பாடினார், ஜெபித்தார். பல எச்சரிப்புக்களை கொடுத்தார். ஆனாலும் மக்கள் மனந்திரும்பாமல் இருந்தது மாத்திரமல்ல, எரேமியாவுக்கே தீங்கு செய்தனர். அதற்காக அவர் தம் பொறுப்பிலிருந்து பின்வாங்கிவிடவில்லை.

இயேசு கிறிஸ்து உலகில் வாழ்ந்தபோது, நன்மை செய்கிறவராகவே சுற்றித்திரிந்தார். அப்படிப்பட்டவருக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன? சகலத்தையும் ஒரு நொடிப்பொழுதில் மறந்து, “அவரைச் சிலுவையில் அறையும்” என்று கூக்குரலிட்டார்களே. தமக்குத் தீமை செய்த மக்களுடைய பாவங்களுக்காகவும் இயேசு தம்மைச் சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை அன்று அந்த மக்கள் உணர்ந்திருக்கவில்லை. அதற்காக ஆண்டவர் தாம் செய்துமுடிக்கவேண்டிய காரியத்தை முடிக்காமல் பின்வாங்கிப் போனாரா? தீயோராகிய சகலருக்காகவும் சிலுவையிலும் அவர் நன்மையையே செய்தார்.

நன்மைக்குப் பதில் தீமை செய்யும் மக்கள் மத்தியில்தான் நாம் இன்றும் வாழுகிறோம். கிறிஸ்துவுக்குள் நன்மை செய்யவே நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதை அறிந்திருக்கும் நாம், கசப்போடும் வைராக்கியத்தோடும் வாழ்கின்றவர்கள் மத்தியில் செய்யவேண்டியது என்ன? தீமைக்குத் தீமை செய்ய நாமும் எத்தனிக்கிறோமா? அல்லது, தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய நாம் முன்வருவோமா? காரணமின்றி தீமை நம்மை நெருங்கும்போது அதை ஜீரணிப்பது சற்றுக் கடினமே! என்றாலும் தேவ வார்த்தையினிமித்தம் பாடுகளை அனுபவிப்பதும், தீமைக்குப் பதிலாக நன்மை செய்வதும், பிறருக்காக பரிந்து மன்றாடுவதும், பிறர் குற்றங்களை மன்னித்து அவர்களை மனதார ஏற்றுக்கொண்டு நேசிப்பதும் தேவனுடைய பிள்ளைகளுடைய அழகு அல்லவா! இயேசுவில் காணப்பட்ட அந்த அழகு நம்மிலும் பிரதிபலிக்கட்டும்.

? இன்றைய சிந்தனைக்கு:  

பிறர்மீது புறங்கூறித் தூற்றித்திரிவோர் மத்தியில் கர்த்தருக்காக வாழவும், தீங்கு செய்கிறவர்களுக்கு நன்மை செய்யவும் என்னை ஒப்புவிப்பேனா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin