? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 38:1-7

உளையிலே அமிழ்ந்தார் எரேமியா

…அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது. அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். எரேமியா 38:6

எரேமியா தேவனால் அழைப்புப் பெற்றிருந்தும், அவர் அனுபவித்த பாடுகள் சொல்லி முடியாது. தேவ ஜனம், தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கவேண்டும் என்பதற்காகவே, எரேமியா பாடுகளை ஏற்றுக்கொண்டார். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முற்படாமல் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே, தேவனுடைய செய்தி கடினமானதாக இருந்தபோதும், அதைத் தைரியமாக அறிவித்தார். அன்றைய மிஷனரிகள், தைரியமாக தேவசெய்தியை நமக்கு அறிவித்திராவிட்டால் இன்று நாம் எப்படி ஆண்டவரின் அன்பை அறிந்திருப்போம்!

எரேமியா தேவனுக்குப் பயந்தவர்; மக்களுடைய சுகத்திற்காக, நல் வாழ்வுக்காகவே பாடுபட்டவர். எல்லாவற்றையும்விட தேவசித்தப்படியே யாவும் நடக்கும் என்பதை ஆணித்தரமாக அறிவித்ததாலேயே அதிக பாடுகளை அனுபவிக்க நேரிட்டது. சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும், மீண்டும் ஒரு பாழடைந்த தண்ணீர் அற்ற துரவில் போடப்பட்டதை இன்றைய வாசிப்புப் பகுதியில் காண்கிறோம். அதற்காக அவர் தயங்கவில்லை. ஏனெனில் தன்னை அழைத்தவரை எரேமியா அறிந்திருந்தார். ஆண்டவரினிமித்தம் பாடுகள் நேரிட்டாலும் அதைச் சகிக்கவும், தேவநாமம் மகிமைப்படவும் எந்த சூழ்நிலையையும் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? மனிதரைப் பிரியப்படுத்த முயற்சிக்காமல் தேவனுக்கே கீழ்ப்படிந்திருக்கிறோமா?

தனது மக்களே தன்னை வெறுப்பதை உணர்ந்தும், எரேமியா தன் மக்கள் அழிந்துபோகக்கூடாது என்பதில் அக்கறையாயிருந்தார். தேவ வார்த்தையை அறிவித்து, அவர்கள் தங்கள் ஜீவனைப் பாதுகாத்துக்கொள்ளும் வழியைக் காட்டினார். கிறிஸ்துவும்கூட தமது சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டவராயிருந்தும், அவர் தமது மக்களை நேசித்தார். இன்று நமது காரியம் என்ன? நம்மை வெறுக்கிறவர்களை வெறுக்கிறோமா? நேசிக்கிறோமா?

துரவிலே போடப்பட்டபோதும், தனது வாழ்வில் நடக்கின்ற யாவும் தேவ சித்தப்படியே நடக்கின்றன என்பதை எரேமியா அறிந்திருந்ததாலேயே அமைதியாகவே சகலத்தையும் ஏற்றுக்கொண்டார். தேவன் அறியாமல் எதுவும் நம்மை நெருங்காது என்ற நிச்சயம் நமக்கும் இருக்குமானால், உளையிலே அமிழ்த்தப்படாலென்ன, அடித்து நொருக்கப்பட்டாலென்ன, அழிகின்ற மக்களுக்காகத் தைரியமாக எழுந்து நிற்பேனா? நாம் தீர்க்கதரிசியாகவோ, ஊழியக்காரனாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் மக்கள் நரகத்திற்கு போய்விடக்கூடாது என்ற பாரம் நமக்கு வேண்டுமே! அப்படியானால் தேவசெய்தியை தைரியத்துடன் கூறி அறிவிக்கலாமே! நாமோ அதை மாத்திரம் தவிர்த்து, வேறு காரியங்களில் ஈடுபட்டுள்ளோமா?

? இன்றைய சிந்தனைக்கு:

   அந்தத் துரவினுள் எரேமியா விழுவதற்கு தேவன் அனுமதித்தார். ஆனால் அதற்குள்ளும் அவனை காப்பாற்றினார். அந்த தேவன் என்னையும் காப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin