? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:39-48

இயேசுவைப் பின்பற்றி நட!

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். மத்தேயு 11:29

ஒரு நீண்டசாலையினூடாக ஒரு காரிலே ஒரு தாயும் இரண்டு பெண்பிள்ளைகளும் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மனித நடமாட்டமே இல்லாத அந்த சாலையில் கார் டயர் ஒன்றில் காற்று போய்விட்டது. காற்றை நிரப்பவோ சரிசெய்யவோ யாருமில்லாத சூழ்நிலையில் பன்னிரென்டு வயது மதிக்கத்தக்க அந்த மூத்த மகள் உடன் இறங்கி, காற்றுப்போன டயரைக் கழற்றிவிட்டு, வண்டிக்குள் இருந்த காற்று நிரப்பப்பட்ட மாற்று டயரை எடுத்துவந்து, பொருத்திவிட்டாள். தாய்க்கோ ஆச்சரியம்!

“எப்படி உன்னால் முடிந்தது” என்பதுபோல் தன் மகளைப் பார்க்கிறாள். “அப்பாவைப் பார்த்து” என்று அந்த மகள் புன்சரிப்புடன் கூறுகிறாள். இந்த விளம்பரத்தை நாம் தொலைக்காட்சியில் கண்டிருக்கிறோம். அப்போது என்னுள் வந்த சிந்தனை இதுதான்: இந்த மகள் தனது உலக தகப்பனின் முன்மாதிரியை அவதானித்திருந்ததால்தான் இந்த இக்கட்டான நேரத்தில் அவளால் இந்தக் நற்காரியத்தைச் செய்ய முடிந்தது; அப்படியென்றால், ஆண்டவராகிய இயேசு நமது தகப்பனாக இந்த உலகில் வாழ்ந்தபோது நம்முன் செய்த நற்காரியங்கள், அவரது முன்மாதிரி நாம் பிறருக்கு முன்மாதிரியாக வாழவும் நமக்கு எவ்வளவு ஊன்றுகோலாக இருக்கவேண்டும்.

நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு செய்த பிரசங்கங்கள் முழுவதையும் நாம் தேடித் தேடிப் படிப்போமானால், நற்குணத்தில் வளருவது, பிறரை மனதார மன்னிப்பது, அவர்களிடம் அன்பை காட்டுவது, விட்டுக்கொடுப்பது, சத்துருக்களை சிநேகிப்பது, சபிப்பவர்களை ஆசீர்வதிப்பது, தீமை செய்தவர்களுக்கும் நன்மைசெய்வது, நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துவர்களுக்காகவும் ஜெபிப்பது… இப்படியாக இது நீண்டுகொண்டே போகிறது. ஆண்டவர் கற்றுக்கொடுத்தது மட்டுமல்ல,  வாழ்ந்தும் காட்டினார். தன்னைப் பிடிக்கவந்த போர்சேவகனின் வேலைக்காரன் காது வெட்டப்பட்ட போது அதை ஒட்ட வைத்தார். சிலுவையில் அறைந்து தன்னை அவமானப்படுத்திய மக்களுக்காக “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தபோது, அவரது அன்பும் கருணையும் மன்னிப்பும்கூட அந்த சிலுவைப்பாடுகளில் வெளிப்பட்டதே.

சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள இயேசுவின் குணாதிசயம் இன்று நம்மில் வெளிப்படுகிறதா என்பதைச் சிந்திப்போம். நம்மைப் பார்த்து ஆச்சரியப்படுகிறவர்களிடம் “அப்பாவைப்போல” என்று நம்மால் கூறக்கூடுமா? இயேசு வாழ்ந்த மாதிரியை, பகைவரையும் நேசித்த அவருடைய நேசத்தை படித்து உணர்ந்து துக்கப்படுகிற நாம் அவர் காட்டிய வழியிலே நடக்க நம்மை ஒப்புவிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

சாந்தமும் மனத்தாழ்மையும் மிக்க என் பரம அப்பாவின் சாயல் இன்று என்னில் வெளிப்படுகிறதா என்பதை உண்மை உள்ளத்துடன் ஆராய்ந்து என்னைச் சரிப்படுத்துவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin