? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 11:33-40

முன்னோக்கி ஓடுவோமாக!

…திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, …இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபி 12:1

ஒரு பிரயாணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நமது சிந்தனையில் ஒரு இலக்கு இருக்கவேண்டும். நாம் எங்கே போகிறோம் என்ற நிச்சயம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் அலைந்து திரியவேண்டியிருக்கும். அத்தோடு, சரியான இலக்கு இல்லாவிட்டால், நாம் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேரவும் முடியாது. இது ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில், ஒரு பிரயாணத்தை நாம் இலக்குடன் தொடங்கும்போது எப்படியாவது அவ்விடத்தைச் சேரவேண்டும் என்ற வாஞ்சை நமக்குள் ஏற்படும். அப்பொழுது அந்த வழியில் என்ன தடைகள் ஏற்பட்டாலும், பொறுமையோடு யாவற்றையும் சகித்துக்கொண்டு நாம் போகவேண்டிய இடத்தைப் போய்ச்சேருவோம் அல்லவா!

எந்தவொரு மனிதனும் ஒரு நூதனமான வாழ்வை வாழுவதில்லை. நமக்கு மட்டும்தான்கஷ்டம்; அல்லது நான் ஒருவன்தான் இக் கடின பாதையில் செல்லுகிறேன் என்று எவருமே சொல்லமுடியாது. நமக்கு முன் எத்தனையோ மக்கள் வாழ்ந்து, போராடி, ஜெயம்பெற்ற  பாதையில்தான் நாமும் சென்றுகொண்டிருக்கிறோம். அவர்களுடைய விசுவாச வாழ்வு, தேவனுடன் சேர்ந்து அவர்கள் பெற்ற வெற்றிகள், யாவும் நம்மை ஊக்குவித்துக்கொண்டே இருக்கின்றன. நாம் ஒருபோதும் தனியே போராடுவதில்லை; நாம் இன்று முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளோடு போராடுகின்ற முதல் மனிதனும் நாம் அல்ல. நமக்கு முன்னே பொறுமையோடு ஓடி வெற்றிபெற்ற அநேக வேதாகம விசுவாச வீரர்கள் நமக்கு சாட்சியாக இருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் கிறிஸ்து அருளிய மீட்பைக் கண்டதில்லை. ஆனால் இன்று நாம் அந்த விசேஷித்த நன்மையைப் பெற்றிருக்கிறோம். இது நாம் பெற்ற பெரிய பாக்கியம் அல்லவா!

வாழ்வின் நிலைமைகள், நாம் வாழும் சூழ்நிலைகள், சம்பவங்கள் மாற்றமடையலாம். இன்று நாம் பெரிய சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் இவை எதுவும் நிரந்தரம் இல்லை. ஆகவே நமது இலக்கு ஒருபோதும் மாறக்கூடாது. நாம் இயேசுவைப்போல ஆகவேண்டும், நித்தியத்தில் நாமும், பிறரும் அவருடன் வாழவேண்டும்; இந்த இலக்கிலிருந்து விலகாதிருக்கதூயஆவியானவர் துணைசெய்வாராக. இந்த இலக்கை நாம் அடையக்கூடாதபடிக்கு நாடோ, வீடோ, சமூகமோ தடையாயிருக்குமானால், அந்தத் தடைகளைத் தாண்டி முன்செல்ல கர்த்தருக்குள் பெலனடைவோமாக. நமது கண்கள் கர்த்தரையே நோக்கி இருக்கட்டும்; மாறாக, சூழ்நிலைகளைப் பார்த்தால் நிலைதடுமாறிவிடும். சூழ்நிலைகள் மாத்திரமல்ல, நமது பாவமும் நமக்குத் தடையாக இருப்பதைக் காண நம் மனக்கண்கள் பிரகாசமடையட்டும். பாவத்தை ஜெயங்கொண்ட ஆண்டவர் நமக்கிருக்கிறார் என்ற தைரியத்துடன் அவரையே நோக்கி பொறுமையோடு முன்செல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

   இயேசுவை நோக்கி ஓடும் என் ஓட்டத்தின் இலக்கைத் தடுக்கும் காரணிகள் எவை? அவற்றை நான் எப்படி தோற்கடித்து முன்னேறுவேன்? சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin