? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 4:25-32

அன்பற்ற பேச்சு

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். நீதிமொழிகள் 16:24

பாடசாலை முடிந்து வீடு திரும்பவேண்டிய மகன் அன்று வரவில்லை. அவன் காணாமல் போய்விட்டான். அவனைத் தேடி உறவினரும் நண்பர்களும் அங்குமிங்கும் ஓடினார்கள். குளத்திலும் ஆற்றிலும் கிராமத்திலும் ஒரு இடம்விடாமல் தேடினார்கள். எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டைவிட்டு ஓடியவன், அலைந்து திரிந்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்துசேர்ந்தான். அவன் வீட்டைவிட்டுப் போகக் காரணம் என்ன? வீட்டுக் கஷ்டமோ, படிப்பில் விருப்பமற்ற நிலையோ அல்ல. குடிக்கு அடிமையான அவனது தகப்பனின் அன்பற்ற கொடூர வார்த்தைகளும், கொடுமைகளுமே அவனை வெறுப்புக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பட்ட நாளுக்கு முதல் நாளில் தன் நண்பர்கள் முன்பாக ஏற்பட்ட தலைகுனிவினால் வெறுப்புடன் அவன் வீட்டைவிட்டுப் போயிருந்தான்.

இனிய சொற்கள், ஆத்துமாவுக்கு தேன்போல இனிமை மாத்திரமல்ல, எலும்புகளுக்கு மருந்து போன்றது என்று சொல்லுகிறார் சாலோமோன். அதாவது, வியாதிகள் குணமாவதற்கும் அது கைகொடுக்குமாம். அதனால்தான் பவுலடியார், “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்” என்கிறார். நல்ல வார்த்தை பேசதெரியாவிட்டால், கேட்கிறவன் நாம் பேசும் வார்த்தைகளால் பலனடையும்படி பேசத் தெரியாவிட்டால் அமைதியாய் இருந்துவிடுவது நல்லது. கெட்ட வார்த்தை வாயில் பிறப்பதற்கு முதற்காரணம், கோபம். ஆகவேதான் பவுலும், கோபம் கொண்டாலும், அடுத்தவனை வேதனைப்படுத்துகின்ற பாவத்துக்கு நாம் விலகவேண்டும் என்கிறார். ஒருவருக்கொருவர் அன்பாயும் தயவாயும், ஒருவரையொருவர் மன்னித்தும் ஒன்றாய் வாழும்போது அது நமக்கும், நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கும் மிகுந்த ஆசியைக் கொண்டுவருமே!

இன்று குடும்பங்களிலே பல பிரச்சினைகளுக்கு, ஒருவருக்கொருவர் பேசுகிற அன்பற்ற வார்த்தைகளே முக்கிய காரணமாகும். நாம் பேசும் வார்த்தைகள் பிறர் வாழ்வுக்கு நம்பிக்கை கொடுக்கிற அன்பின் வார்த்தைகளா? அல்லது, பிறர் உள்ளத்தைக் காயப்படுத்தி, வேதனைப்படுத்தும் வார்த்தைகளா? பிறரின் தவறுகளைச் சரிப்படுத்தி நல்வழிப்படுத்துவது தவறல்ல. ஆனால் அதை அன்புள்ளத்துடன் செய்யவேண்டும். நமது இருதயம் அன்பினால் நிறைந்திருந்தால், பேசும் வார்த்தைகளும் அன்புள்ள பண்புள்ள வார்த்தைகளாக இருக்கும். அன்பற்ற கண்டிப்பினால் ஒரு பலனும் இல்லை. கோபம் வந்தால், அதைக் கட்டுப்படுத்தமுடியாவிட்டால் அவ்விடத்தைவிட்டே அகன்றுபோய்விடுவது சிறந்தது. கோபம் அடங்கிய பிற்பாடு பேசலாமே! இதுவரை அன்பற்ற வார்த்தைகளினால் யாருடைய மனதையாவது நாம் புண்படுத்தியிருப்பதை பரிசுத்த ஆவியானவர் உணர்த்துவாரானால் அதற்காக தேவனிடமும், நம்மால் காயப்பட்டவரிடமும் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாகுவோமாக!

? இன்றைய சிந்தனைக்கு:  

பிறரின் அன்பற்ற வார்த்தைகளால் மனமுடைந்ததுண்டா? நமது இருதயத்தை அன்பினால் நிரப்ப நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin