? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 31:1-24

உடைந்த பாத்திரம்

உடைந்த பாத்திரத்தைப்போலானேன். சங்கீதம் 31:12

ஒரு பாத்திரம் உடைந்துபோனால் நாம் அதை வீசிவிடுகிறோம். ஆனால், ஒருகுயவன் தான் செதுக்கிய மண்ணினாலான பாத்திரம் அவன் கைகளில் உடைந்து போகுமேயானால், அவன் அதைத் தூக்கி எறிந்துவிடமாட்டான். அதைத் திரும்பவும் புதிதானதும், தனது மனதிற்கு இசைவானதுமான பாத்திரமாக வனைந்து எடுப்பான்.

31ம் சங்கீதத்திலே தாவீது ராஜா, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; நான் உடைந்த பாத்திரம் போலானேன்” என்று மனமுடைந்து பாடியுள்ளார். அவர் உடைந்துபோகக் காரணம், அவர் தனது வாழ்க்கையில் முகங்கொடுத்த ஏராளமான எதிர்ப்புகள், நிந்தைகள், அவமானங்கள், மரண ஆபத்துக்கள், தனிமை போன்ற பல வேதனையான அனுபவங்களேயாகும். பல சந்தர்ப்பங்களில் அவருக்கு விரோதமாக மறைமுகமாக எதிராளிகள் ஆலோசனை செய்து அவரை வீழ்த்திவிட சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது சொந்த மகனே அவரது உயிருக்கு வலை வீசிக்கொண்டிருந்தான். அதனால் வனாந்தரங்களிலும் குகைகளிலும் அவர் ஓடி ஒளிந்து வாழநேரிட்டது. இவற்றினால் பயம் அவரது இருதயத்தைக் கலக்க,அவரது உள்ளம் “உடைந்த பாத்திரத்தைப் போலாயிற்று”. ஆனாலும் அவர் உடைந்து போன நிலையிலேயே இருந்துவிடவில்லை. தான் உடைந்துபோன சந்தர்ப்பங்களிலெல்லாம் தன் உள்ளத்தைத் தேற்றவல்ல ஆண்டவரிடம், தன் பாரங்கள் பயங்கள் எல்லாவற்றையும் ஏறெடுத்தார். “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது. என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” (சங்.31:14,15) என்று விண்ணப்பஞ் செய்தார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்” என்று அவர் மற்றவர்களையும் தேற்றினார்.

தாவீது முகங்கொடுத்த சிக்கல்கள் நமக்கு நேரிடவேண்டியதில்லை; அவர் ராஜாவாக அபிஷேகம் பெற்றவர். அவரை வீழ்த்திவிட்டு ராஜ்பாரத்தைக் கைப்பற்ற பலர் திட்டமிட்டே தாவீதுக்கு உபத்திரவம் கொடுத்தனர். இந்த உலகம் உள்ளவரைக்கும் பாவத்தின் விளைவாக பல இன்னல்களுக்கு நாமும் முகங்கொடுத்தே ஆகவேண்டும்.வேதனை வரலாம்.ஆனாலும், கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டுள்ள நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. உடைந்தாலும், உடைக்கப்பட்டாலும் நம்மை மீண்டும் செதுக்கி உருவாக்க நம் ஆண்டவர் இருக்கிறார். சத்துருவின் எந்த ஆலோசனையும் தந்திர உபாயங்களை நம்மை நெருங்காது என்று சொல்லமுடியாது. நெருங்கினாலும் கர்த்தர் நம்முடன் இருந்து நடத்துவார் என்பதே சத்தியம்.

? இன்றைய சிந்தனைக்கு: 

  உடைந்த பாத்திரம்போன்ற என்னைப் படைத்த பரம குருநாதா, அடியேன் என்னைக் கண்ணோக்கி அன்புடன் ஆதரி அருள்நாதா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin