? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 5:1-10

நன்மை செய்வதில் ஒருமனப்படுங்கள்!

கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? அப்போஸ்தலர் 5:9

குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருமனதுடன் காரியங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது நிச்சயம் குடும்பம் மேம்படும். அத்துடன், அவர்களில் ஒருவர், தெரியாமல் விடக்கூடிய தவறுகளை மற்றவர் கண்டு அதைத் திருத்திக்கொள்ளவும் ஏதுவாக அமையும். ஆனால் ஒரு தப்பான காரியம் செய்வதற்கு தெரிந்தே கணவன் மனைவி ஒன்றிணைந்து உடன்பட்டு அதைச் செய்யும்போது, நிச்சயம் அது குடும்பத்தை மிகவும் பாதிக்கும்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரேமனமுள்ளவர்களாக, தங்கள் தங்களிடத்தில் உள்ளவற்றை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டு ஒரே கூட்டமாயிருந்தார்கள். அதில், அனனியாவும் அவன் மனைவி சப்பீராளும் உள்ளடக்கம். இவர்களும் தங்களது காணியாட்சிகளை விற்று அப்போஸ்தலருக்குக் கொடுக்கவேண்டும் என்று எல்லோரையும்போல விரும்பினார்கள்; அந்த நல்ல தீர்மானத்தை செயற்படுத்தினார்கள். அவ்வளவும் சிறந்த செயலே! ஆனால் தாம் விற்ற பணத்தில் கொஞ்சத்தை மறைத்து, தாங்கள் முழுத் தொகையையும்  கொடுப்பதாக மாய்மாலம் பண்ணினார்களே, அங்கேதானே அவர்களுடைய அழிவும் ஆரம்பமானது. இதிலே இருவரும் ஒருமனப்பட்டிருந்தார்கள். தமது வஞ்சக செயலை அப்போஸ்தலர்கள் அறியமாட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள், பொய் பேசியது பேதுருவிடம் அல்ல; பரிசுத்த ஆவியானவரிடமே பொய் சொன்னார்கள் என்று பேதுரு சொல்லியும், அனனியா வாய் திறக்கவில்லை. தேவனிடத்தில் பொய் சொன்ன அனனியா அங்கேயே விழுந்து செத்தான். சற்றுப் பின்னர், அதே பொய்யை ஆமோதித்த சப்பீராளும் செத்தாள்.

பழைய ஏற்பாட்டில் நாபாலின் மனைவி அபிகாயில், தன் கணவன் மதிகெட்டு ஒருதவறான காரியத்தைச் செய்யத் துணிந்தான் என்பதைக் கண்டதும், தன் கணவனிடம் தவறைச் சுட்டிக்காட்டினாள். மட்டுமல்ல, நாபால் அவமதித்த தாவீதிடம் நேரடியாக சென்று தன் கணவன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு, தன் கணவனையும் தன் குடும்பத்தையும் ஒரு பெரும் அழிவிலிருந்து காத்துக்கொண்டாள் (1சாமு.25). இங்கே அனனியா சப்பீராள் பிறருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் ஒருமனப்பட்டது, தேவனுக்கு விரோதமான ஒரு வஞ்சகத்தில் அல்லவா! குடும்ப வாழ்வில் ஒருமனதுடன் நன்மைகள் செய்து தேவனை மகிமைப்படுத்தும்போது அது நிச்சயம் மனமகிழ்ச்சியைத் தரும். ஆனால், ஒருவர் எடுக்கும் முடிவு தவறு என்று கண்டும், அதைச் சரிசெய்யாமல் ஒருவருக்கொருவர் அத் தீங்குக்குத் துணைபோவது அக்குடும்பத்தையே அழித்துவிடும்.

? இன்றைய சிந்தனைக்கு: 

  இதுவரை கணவன் மனைவியாக எடுத்த தீர்மானங்கள், செய்த செயல்கள் தேவனுக்கு மகிமையும் கனத்தையும் கொடுத்ததா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin