? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப் 16:25-34

வாழ்க்கை பேசட்டும்

நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே, நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம். அப்போஸ்தலர் 16:28

பிலிப்பு பட்டணத்திலே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததினிமித்தம் பவுலையும் சீலாவையும் பிடித்து, அடித்து, சிறையிலடைக்கும்படி உத்தரவானது. சிறைச்சாலைக் காரனும் இவ்விருவரையும் உட்காவலறையில் அடைத்து, கால்களைத் தொழுமரத் தில் மாட்டி விட்டான். நடுராத்திரியிலே இவர்கள் ஜெபித்து, தேவனைத் துதித்துப்பாட ஆரம்பித்தார்கள். இவர்களைக் காவல் காக்கவேண்டிய சிறைக்காவலாளி தூங்கிவிட்டான். திடீரென நடு இரவில், சிறைச்சாலைக் கதவுகள் திறந்தன; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. நித்திரைவிட்டெழுந்த காவலாளி, நடந்திருப்பதைக் கண்டு, சிறைக்கைதிகள் யாவரும் தப்பிச் சென்றுவிட்டிருப்பார்களோ என்று எண்ணி, பட்டயத்தால் தன்னைத் தானே குத்திக் கொல்லப்பார்த்தான். அப்போது, பவுலும் சீலாவும் அவனைத் தடுத்து, “நாங்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறோம்” என்றார்கள். இந்தவேளையில் அச்சிறைக் காவலாளி பவுலையும் சீலாவையும் நோக்கிக் கேட்ட முதல் கேள்வி, “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்பதாகும். இந்த இடத்தில் பவுலோ சீலாவோ அவனுக்கு நற்செய்தி சொன்னதாக எழுதப்படவில்லை. ஒருவேளை அவன் ஏற்கனவே நற்செய்தியைக் குறித்து கேள்விப்பட்டவனாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் பவுல் சீலா இருவரது வாழ்வின் சாட்சியே காவலாளியை இரட்சிப்புக்கு நேரே வழிநடத்தியது.

உண்மையில் அன்று அந்த சமயத்தில் திறவுண்டது சிறைக்கதவுகள் மாத்திரமல்ல; மாறாக, சிறைக் காவலாளியின் இரட்சிப்புக்கான வாசலும் திறவுண்டது. இன்று கிறிஸ்துவின் நற்செய்தியை, வானொலி தொலைக்காட்சி நற்செய்திக்கூட்டம் கசட்டுக்கள் வீடியோக்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்றும், போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிக்கும் சபைகள், ஸ்தாபனங்கள் என்றும் எங்கும் பெருகிவிட்டன. இது நல்லது. சில இடங்களிலே அறிவிக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஒரு முக்கிய காரியத்தை நாம் சிந்திக்கவேண்டும். அறிவிக்கும் நற்செய்தியின்படி நாம் வாழுகிறோமா? ஜனங்கள் அதைக் காண்கிறார்களா? இதுவே முக்கியம். அன்று சிறைக்காவலாளி நற்செய்தியைக் கேட்டது மாத்திரமல்ல, அந்த நற்செய்தியை அறிவித்தவர்களுடைய வாழ்க்கை சாட்சியையும் நேரிலே கண்டான். உடனே தன்னை மட்டுமல்ல, தன் முழுக் குடும்பத்தையுமே கிறிஸ்துவுக்கென ஒப்புக் கொடுக்க முன்வந்தான்.

நமது வாழ்விலே நற்செய்தி காணப்படுகின்றதா? நாம் மாத்திரமல்ல, நம்மைச் சுற்றிலும் வாழுகிறவர்களும் கிறிஸ்துவின் அன்பில் மூழ்கவேண்டும் என்ற வாஞ்சை நமக்குள் இருக்கிறதா? இன்றே சிந்தித்து, தேவனுக்கு நேராகத் திரும்புவேனாக.

? இன்றைய சிந்தனைக்கு: 

 கிறிஸ்துவின் நற்செய்தி வெறும் வாய் பிரசங்கமாக இராமல், அந்த மகிமையின் செய்தியை நமது நடத்தையில் வெளிப்படுத்துவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin